Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருக்குறள் நெறியை உறுதியேற்று நடைபெற்ற திருமண வரவேற்ப்பு !

இன்று மாலை சென்னை பெரியார் நகரில் பாலாஜி ஈனமுத்து பெருமாள், மணிமாலா ஆகிய இணையருக்கு திருமண வரவேற்பு சிறப்பாக நடைபெற்றது . இந்த வரவேற்பு நிகழ்வில் திருக்குறள் வழியை போற்றும் தமிழர் பண்பாட்டின் அடிப்படையிலான உறுதி மொழியை இணையர்கள் ஏற்றனர். இந்நிகழ்வில் தமிழின உணர்வாளர் சமர்ப்பா அவர்கள் வெகு சிறப்பாக தமிழர் எழுச்சிப் பாடல்களை பாடினார். அப்பாடல்களுக்கு பொருந்தும் வகையில் இன உணர்வாளர் தன்மானம் சக்கிரவர்த்தி சிறப்பாக நடனம் ஆடினார். வயலின் இசைக்குழு அருமையான தமிழ் மொழி சார்ந்த பாடல்களை இயற்றினர். திருமண வரவேற்புக்கு ஏராளமான தமிழ்உணர்வாளர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியை நேரில் கண்ட  அனைவரும் தமிழர் வழி நிகழ்ச்சியை பார்த்து வியந்து மகிழ்ந்தனர். பாலாஜியின் திருமண நிகழ்வும் தமிழ் மந்திரங்கள் ஓதப்பெற்று சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் கொடுத்த திருக்குறள் உறுதிமொழியை  பாலாஜி மணிமாலா இணையர் மேடையில் வாசித்தனர். அந்த உறுதி மொழியை உங்கள் பார்வைக்கு இப்போது வைக்கிறோம். இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற திருக்குறள் உறுதிமொழியை ஏற்று இல்ல நிகழ்சிகளை தமிழர்கள் நாம் நடத்த முன்வர வேண்டும். பாலாஜி மணிமாலா இணையருக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் தனது வாழ்த்துகளை தெரிவித்தது.

திருக்குறள் உறுதி ஏற்பு !!

ஈனமுத்து பெருமாள் அவர்களின் மகனாகிய பாலாஜி என்கிற நானும், மகாலிங்கம் அவர்களின் மகளாகிய மணிமாலா என்கிற நானும் இல்லற வாழ்வில் இணையும் பொருட்டு தமிழர் மறையான பொய்யா மொழியாம் திருக்குறள் சாட்சியாக கீழ்க்கண்ட உறுதி மொழி ஏற்கிறோம்.

ஐயன் திருவள்ளுவர் முன்மொழிந்த வாழ்க்கை நெறிப்படி,

அன்பு, இறக்கம், கருணை, விருந்தோம்பல், ஒழுக்கம், அடக்கம், வாய்மை, தூய்மை, பெரியோரை மதித்தல் ஆகிய இல்லற அறங்களை பேணி

பொறாமை, வெகுளி, பேராசை, பிறன் பொருள் விழைதல், இன்னா செய்தல், கயமை, சிற்றினம் சேர்தல் போன்ற தீக்குணங்களை பற்றாமல்

அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலில் குறிப்பிட்ட அனைத்து நன்னெறிகளின் படியும் நாங்கள் சார்ந்த இந்த தமிழ் இனத்திற்கும், தமிழ் மண்ணுக்கும், எங்கள் முன்னோருக்கும் பெருமை சேர்க்கும் வகையிலும்,

எக்காலத்தும், எந்நிலையிலும், எத்துணையும் வள்ளுவர் வகுத்த நெறி பிறழாமல் வையத்து வாழ்வாங்கு வாழவும்,

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது "

என்ற காலத்தால் அழியாத திருக்குறளின் பொருளுக்கு தக்கவாறு வாழவும் இந்த தருணத்தில் இல்லற வாழ்வில் இணைய முழுமனதுடன் உறுதி ஏற்கிறோம்.  

வாழ்க வள்ளுவம், வாழ்க தமிழ் மொழி !



[vuukle-powerbar-top]

Recent Post