Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தை அதிர வைக்கும் பாலியல் குற்றங்கள் பாலியல் கல்விக்கான அவசியத்தை உணர்த்துகிறது !!

அண்மைக் காலமாக தமிழகத்தில் நடைபெறும் பாலியல் தொடர்பான குற்றங்கள் , கொடும் செயல்கள், வன்முறைகள், கொலைகள் தமிழ் சமூகத்தின் உளவியல் ரீதியான பக்குவமின்மையை காட்டுகிறது. ஒரு சமூகம் எந்த அளவிற்கு மனிதத் தன்மையில் இருந்து வழுவி உள்ளது மாந்தவியல் சார்ந்த விழிப்புணர்வு பெறவில்லை என்பதையும் காட்டுகிறது.

பத்தாம் வகுப்பு மாணவன் ஆறாம் வகுப்பு சிறுமியை வன்புணர்வு செய்ததோடு மட்டும் அல்லாமல் அந்த சிறுமியை கொடூரமாக கொலை செய்யும் அளவிற்கு துணிந்து உள்ளான் என்றால் அவனுடைய மனம், புத்தி, பகுத்தறியும் திறன் எந்த அளவிற்கு தடுமாறி கீழான நிலைக்கு சென்று விட்டது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இன்னும் சில நிகழ்வுகளில் மதுவின் தாக்கத்தால் சிலர் தங்கள் சுயக் கட்டுப்பாட்டை இழந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். கொலைக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவருகிறது. திரைப்படங்கள், பண்பிழந்த சமூகம், தீய நண்பர்களின் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம், ஆபாசப் படங்கள், மது, போதைப் பொருட்கள், இயலாமை, வறுமை, பெற்றோர்களின் அலட்சியம், பாலியல் குறித்த தெளிவின்மை  என பல காரணங்கள் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க அடிப்படையாக உள்ளது.

இதையெல்லாம் குறித்து ஒரு சமூகம், அரசு ஆய்வுகள் செய்யாமல் மேம்போக்காக குற்றங்களுக்கான தண்டனையை மட்டும் அதிகரிப்பதால் எந்த பயனும் இல்லை . இந்த குற்றங்களை களைவதற்கான வழிமுறைகளை நம் தமிழ்ச் சமூகம் ஆய்வு செய்தல் அவசியமாகிறது.

பள்ளியில் இருந்தே பாலியல் தொடர்பான கல்வி முறையை அறிமுகப் படுத்துதல் தற்காலத்தில் பயனுள்ளதாகவே அமையும். மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல கட்டாய பாலியல் கல்வி பெருமளவில் பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு விடை அளிக்கும். பதின்பருவ காலத்தில் பாலியல் சார்ந்த ஆர்வம் அதிகரிக்க, மாணவர்களே அதற்கான விடையை தேடி அலைகிறார்கள் . அந்த விடையை பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, உளவியல் மருத்துவர்களோ கொடுப்பதில்லை. மாறாக இணையதளங்கள், புத்தகங்கள், நண்பர்கள் மூலமாகவே தங்களின் பாலியல் ஐயங்களை  தாங்களாகவே தீர்க்க முயல்கின்றனர் மாணவர்கள். சில மாணவர்கள் அதில் வெற்றி பெற்றாலும் பலர் தோல்வியை தான் தழுவுகின்றனர்.  அது தான் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணியாக அமைகிறது.

பள்ளிகளில் பாலியல் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை கல்வித் துறை , உளவியல் மருத்துவர்கள் ஆலோசிக்க வேண்டும். உடலின் பிறப்பு உறுப்புகள், மேலோங்கும் பாலியல் உணர்வு, குழந்தை பிறப்பு, உடல் உறவு, தவறான/தகாத உடல் உறவு , உடல் உறவின்  மூலமாக பரவும் நோய்கள், கருத்தரிப்பு, பாலியல் மன அழுத்தத்தை எப்படி எதிர் கொள்வது, பாலியல் குற்றங்கள் போன்ற பல தலைப்புகளில், பரிமாணங்களில் பாலியல் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நம் குடும்ப கட்டமைப்பு, பண்பாட்டிற்கு புறம்பாக இல்லாமல், அதற்கேற்ற அளவில் பாலியல் கல்வியை முறைப்படுத்தி மாணவர்களுக்கு கொடுக்கப்படலாம். பல நாடுகளில் இத்தகைய நடைமுறையை பின்பற்றுகிறார்கள். பெற்றோர்களும் தங்கள் பதின்பருவ பிள்ளைகளிடம் பாலியல் குறித்து பேச முன்வரவேண்டும். கல்வி முறையில் பாலியல் பாடம்  சேர்க்கப்பட்டால் பெற்றோர்களுக்கு பிள்ளைகளிடம் இது குறித்து பேச எளிமையாகவும் அமையும்.

நம் சமூகத்தை சிறந்த முறையில் நெறிப்படுத்துவது நம் கடமையாகும். அதிகரிக்கும் பாலியல் குற்றங்களை, சமூக சீர்கேடுகளை தடுக்க நல்லொழுக்கம் சார்ந்த கல்வியுடன் பாலியல் / உளவியல் கல்வியும் அவசியமாகிறது. இக்கருத்தை உடனடியாக அரசும், நம் சமூகமும் அலட்சியம் செய்யாமல் கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்   என்று வலியுறுத்துகிறோம்.










[vuukle-powerbar-top]

Recent Post