Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பகல் கொள்ளை அடிக்கும் பெருநிறுவனங்கள். இதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லையா ? நுகர்வோருக்கான உரிமைகள் இல்லையா ?

அண்மையில் சென்னையில் உள்ள ஸ்கை வாக் வணிக வளாகத்தில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கிற்கு சென்றோம். இணையம் மூலமாக நுழைவுச் சீட்டு பெறப்பட்டது. இணையத்தில் நுழைவு சீட்டு பெற்றதால் கூடுதலாக 100 ரூபாய் பெறப்பட்டது. திரையரங்க நுழைவுச் சீட்டு குறிப்பிட்ட தொகைக்கு மேல் விற்கக்கூடாது என்ற சட்டமும் உள்ள நிலையில் இணையத்தில் கூடுதல் பணம் பெறப்படுகிறது.

அடுத்ததாக இந்த திரையரங்க வளாகத்தில் செல்வதற்கு முன்பு வாடிக்கையளர்களின் பைகள் சோதனை செய்யப்படுகிறது. அதில் ஏதேனும் திண்பண்டங்கள் உள்ளனவா என்று சோதிக்கப்படுகிறது. திண்பண்டங்கள் இருந்தால் அவற்றை உள்ளே அனுமதிப்பதில்லை. காரணம் வாடிக்கையாளர்கள் திரையரங்க வளாகத்தில் மட்டுமே  திண்பண்டங்களை  வாங்க வேண்டும் என்பதற்காக இப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சரி, உள்ளே சென்று ஏதாவது திண்பண்டங்களோ, தண்ணீரோ , குளம்பியோ வாங்கலாம் என்று நினைத்தால் , இதற்கு இந்த திரையரங்க நிர்வாகம் நிர்ணயித்த விலை அநியாயமாக உள்ளது. எந்த ஒரு பொருளுக்கும் குறிப்பிட விலைக்கு மேல் விற்கக்கூடாது என்று அதிகபட்ச விலை நிர்ணயித்த நிலையில், இங்கு விற்கப்படும் பொருட்களுக்கு எந்த ஒரு விலைக்கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த பற்றுச்சீட்டில் உள்ள விலையை பாருங்கள். பத்து ரூபாய் பெறுமானமுள்ள சோளப்பொரி (பாப்கார்ன்) இங்கு 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பப்ஸ் என்று சொல்லப்படும் உப்பிரொட்டி 70 ரூபாய் , வெளியில் 20 ரூபாய் அதிகபட்சமாக விற்கப்படும் குடிநீர் இங்கு 40 ரூபாய். 20 ரூபாய் பெறுமானமுள்ள குளம்பி (காபி) 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. திரையரங்க நுழைவுச் சீட்டுக்கு கட்டுப்பாடுவிதித்ததால் தின்பண்டங்களுக்கு அந்நியாய விலையை நிர்ணயித்துள்ளது இந்த பெருநிறுவனம்.

இப்படி அநியாயமான விலையில் திண்பண்டங்களை விற்பனை செய்கிறீர்களே இது நியாயமா என்று கேள்வி கேட்டால் அதற்கு எந்த பதிலும் நிர்வாகம் தரவில்லை. பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் கூட இப்படி ஒரு விலையில் திண்பண்டங்கள்  விற்பனை செய்யப்படுவதில்லை , ஆனால் சென்னை நகரின் மையத்தில் இயங்கும் திரையரங்கில் அநியாய விலையில் திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதை நுகர்வோர்கள் தட்டிக் கேட்க வேண்டும். ஒன்று வெளியில் இருந்து திண்பண்டங்களை கொண்டுவர அனுமதிக்க வேண்டும் அல்லது உள்ளே விற்கப்படும் பொருட்கள் நியாயமான விலைக்கு விற்கப்படுதல் வேண்டும். திரைப்படம் பார்க்க வரும் நடுத்தரவர்க்க மக்கள் இதனால் பெரிதளவில் ஏமாற்றப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள்.

இப்படியான பெருநிறுவன பகல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்புகள் இத்தகைய அராஜக விலை நிர்ணயத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். நுகர்வோர்களும் இதற்கான எதிர்ப்புக் குரலை பதிவு செய்தல் அவசியமாகும். நாம் இன்று எதிர்க்காவிட்டால் , நாளை எந்த விலைக்கும் பொருட்களை விற்கலாம் என்ற நிலையை பெருநிறுவனங்கள் உருவாக்கிவிடும்.









[vuukle-powerbar-top]

Recent Post