Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குடியரசு நாள் விழாவில் கலந்து கொண்ட ஒபாமா பாஜக அரசுக்கு வைத்த குட்டு ! தேசிய இன அடையாளம் மறுக்கப்பட்ட குடியரசு நாள் விழா !

ஒபாமா இந்தி தேசத்திற்கு வருகை தந்து இந்திய மக்களுக்கு பகிர்ந்த உரைவீச்சு  பாஜக அரசுக்கு கொடுக்கப்பட்ட  வலிமையான செய்தியாகும். பாஜக அரசு தொடர்ந்து மதவாத, இனவாத, மொழிவாத, பிரிவினைவாத கருத்துக்களை முன்வைத்தே அரசியல் செய்து வருகிறது என்பதை ஒபாமா நன்கு உணர்ந்துள்ளார். அதனால் தான் தன்னுடைய உரையில் இந்திய நாடு மதவாத அடிப்படையிலோ, இன அடிப்படையிலோ  அல்லது வேறு எந்த விதமான  அடிப்படையிலோ இந்திய நாடு  துண்டாடப்படாத வரை இந்தியா முன்னேறும் என்ற செய்தியை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். பாஜக அரசு மக்களிடையே பிரிவினையை தூண்டி விடுகிறது என்ற செய்தியை அவர் நேரடியாக சொல்லாமல் சொல்லிவிட்டார்.

குடியரசு நாள் விழாவில் பங்கேற்ற மாநில ஊர்திகளில் பெரும்பாலான ஊர்திகள் கோவில்களை மட்டுமே முன்னிலைப்படுத்தியது. மேலும் அனைத்து ஊர்திகளின் மாநில பெயர்களும் இந்தியில் மட்டுமே இருந்தது. இதை பார்க்கும் போது வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலையே இந்தியாவில் இல்லை என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. இந்து, இந்தி தான் இந்தியா என்ற தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் இனமான தமிழினம் அங்கு காணப்படவில்லை. தமிழ் எழுத்துக்கள் எங்கும் இல்லை. தமிழர்களின் பண்பாடு நாகரீகம் முன்னிலைப்படுத்தப்படவில்லை. அண்மையில் தோன்றிய இந்தி மொழியே ஆதிக்கம் செலுத்தியது. இதை எல்லாவற்றையும் அமெரிக்க கவனிக்காமல் இல்லை . தமிழகத்தில் எழுச்சிப் பெற்றுள்ள மொழியுரிமை போராட்டம் உட்பட பல செய்திகள் அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிற்கு சொல்லிவருகிறது. பாஜகவின் இந்துத்வா வெறியை பற்றியும் ஒபாமாவிற்கு நன்கு தெரிந்திருந்த காரணத்தால் தான் ஒபாமா அப்படி ஒரு அழுத்தமான செய்தியை பதிவு செய்தார்.

இது ஒரு புறம் இருக்க, ஒபாமா நமஸ்தே என்று இந்தி மொழியில் வணக்கம் வைத்தார் , இந்தி திரைபடத்  பாடலை பாடினார், இந்தி மொழியில் சில வாசகங்களை பேசினார். இது இந்தி தேசிய இன மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியாவில் இந்தி தேசிய இனம் தவிர வேறு இனமே இல்லை என்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டது. இது இந்தி அரசுக்கு கிடைத்த வெற்றியாகும். பல தேசிய இனங்கள் வாழும் இந்தியாவில் ஒரு மொழியில் மட்டுமே வணக்கம் சொல்லி ஒரு மொழியில்  மட்டுமே பேசுவதும், ஒரு மொழிப் பண்பாட்டை மட்டுமே போற்ற வைப்பதும் திட்டமிட்ட இன அடையாள அழிப்பாகும். இந்தியா என்பது இந்தி பேசும் மக்களுக்கான அரசு இல்லை என்பதை இந்திய அரசு வெளிநாட்டு அதிபர்களுக்கு உணர்த்தத் தவறிவிட்டது என்பதை தான் ஒபாமாவின் இந்திப் பேச்சு காட்டுகிறது.

இருப்பினும் ஒபாமா மதவாத, பிரிவினைவாத பாஜக அரசுக்கு வைத்த குட்டு பாராட்டத்தக்கது. அதே நேரம், இந்திய அரசின்  இந்தி அடையாளத்தை நிலைநிறுத்தும் போக்கிற்கு அமெரிக்க அதிபரும் துணைபோய் உள்ளார் என்ற   செய்தி வேதனை அளிக்கிறது. இனி வரும் குடியரசு நாட்களில் தேசிய அடையாளங்களை, மொழிகளை முன்னிறுத்த தேசிய இனங்கள் குரல் கொடுக்க வேண்டும். பாஜக அரசு மாற வேண்டும் அல்லது மாற்றப்படுவார்கள்.  






[vuukle-powerbar-top]

Recent Post