Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தினமலர் எடுத்துக் கொடுக்க ராமகோபாலன் ஊதும் இந்தித் திணிப்பு சங்கு !!

ராமகோபாலன் இந்து முன்னணியின் தலைவரா அல்லது இந்தி முன்னணியின் தலைவரா என்பதை  தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் இந்தி பாடத்தை தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் ராமகோபாலன். இக்கோரிக்கையை அவர் திடீரென்று வைக்கவில்லை . ஓரிரு நாட்களுக்கு முன்பு தினமலர் ஒரு இந்தி ஆதரவு புள்ளி விவரத்தை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் இந்தி படிக்க ஆர்வம் காட்டும் மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது என்ற செய்தி வெளியிடப்பட்டது . அந்த செய்தியை படித்த ராமகோபாலன் அவசரமாக ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிட்டார். அந்த அறிக்கையில் தமிழகத்தில் இந்தி பாடத்தை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார் ராமகோபாலன்.

மேலும் தினமலர் செய்தியில் ஒரு தலித்திய தலைவர் தமிழக தலித் மக்களுக்கு இந்தி தெரியாததால் அவர்கள் வடநாட்டில்  புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் வடநாட்டில் தமிழக தலித்துகளை தீண்டத் தகாதவர்களாக நடத்துகிறார்கள்  என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வடநாட்டில் இந்தி தெரிந்தால் மட்டும் தமிழர்களை சமமாக பாவிப்பர்களா ? ஒரு மொழி தெரிந்தால் தான் சமமாக பாவிப்பார்கள் என்றால் அப்படி ஒரு மொழித் தீண்டாமைக் கொள்கையை நாம் எதிர்க்க வேண்டாமா ?

மக்கள் இந்தி படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால் அதன் காரணம் என்ன ? இந்தியின் தேவையை இந்திய அரசு இன்னும் வேகமாக மக்களிடம் திணிக்கிறது  என்று தானே பொருள் . இந்திக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமையை தமிழுக்கு கொடுத்தால் ஏன் தமிழர்கள் இந்தி படிக்க வேண்டும் ? இந்தி இருக்கும் இடத்தில் எல்லாம் தமிழும் இருக்குமல்லவா ? தமிழ் மொழி ஆட்சி மொழியானால் இந்திப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் அல்லவா ?

ஆகவே நாம் போராடுவது மொழி சம உரிமைக்கும் , தமிழ் மொழி ஆட்சி மொழியாவதற்கும் தானே இருக்க வேண்டும் ? அதை விட்டு விட்டு தினமலரும், இராமகோபாலனும், தலித்திய தலைவரும் இந்தியை தமிழகத்தில் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று கூறுவது தமிழையும் தமிழர்களையும் மேன்மேலும் இந்திக்கு அடிமைப்படுத்தும் செயலே ஆகும். தமிழர்கள் இப்படியான நயவஞ்சக கருத்துக்களை புறந்தள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 2015  மொழியுரிமை ஆண்டில் தமிழை ஆட்சி மொழியாக்குவோம் 
[vuukle-powerbar-top]

Recent Post