Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தில்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ஆட்சியை கைப்பற்றுவோம் ! சென்னை கடற்கரையில் மிகப்பெரிய பேரணி நடத்தி ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டம் !!

"ஊழல்வாதிகள், மதவாதிகள், ஜாதி வெறியர்கள் ஆகியோரிடமிருந்து தமிழகத்தை மீட்டு மக்கள் பணத்தில் வெளிப்படையான நிர்வாகத்தோடு ஒரு அரசியல் கட்சி நடத்தி மக்கள் மனதில் இடம் பெற்று ஆட்சி பீடத்திலும் ஏற முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தியதற்கான கொண்டாட்டம் இது"  என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது .

முதலில் ஆம் ஆத்மி கட்சி தமிழக வரலாற்றை தெரிந்து கொண்டு இவ்வாறு பேச வேண்டும். கட்சியின் பெயர் கூட தமிழக மக்களின் நிற்காத அளவிற்கு இருக்கிறது என்பதையும் எளிய மக்கள் கட்சி உணரவேண்டும். ஒரு வடநாட்டு தலைமையின் கீழ் இயங்கும் இந்தி தேசியக் கட்சிகள் தமிழகத்தை எந்த சூழ்நிலையிலும் ஆள தமிழக மக்கள் விடமாட்டார்கள் என்பதையும் எளிய மக்கள் கட்சி  உணர வேண்டும். வடநாட்டில் ஊழலை மட்டுமே சொல்லி அரசியல் செய்வது போல தமிழகத்தில் "ஊழல் ஒழிப்பு அரசியல்"  செய்து ஆட்சி அதிகாரத்தில் அவ்வளவு எளிதில் ஏறிவிட முடியாது.

காரணம் தமிழகத்தின் சிக்கல் என்பது மிக ஆழமானது . நீண்ட நெடிய வரலாற்றுடன் தொடர்புள்ளது. தமிழகத்தில் நல்ல நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் தேவை. அதற்காக தமிழர்களுக்கு தொடர்பே இல்லாத ஒரு இந்திக் கட்சி தமிழகத்தில் ஆட்சி செய்வதை தமிழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்தி தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவால் தமிழகம் இழந்தது கொஞ்சமல்ல. அது தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மையாகும்.

தமிழகத்திற்கு உடனடி தேவை நல்லாட்சியா அல்லது தன்னாட்சியா என்ற கேள்விக்கு தன்னாட்சி என்பதே தமிழர்களின்  பதில். முதலில் தமிழகத்தை ஒரு இன உணர்வுள்ள தமிழரே ஆட்சி செய்தல் வேண்டும். இந்திக்காரன், ஆங்கிலேயன், சீனாக்காரன் போன்றவன் தலைமை ஏற்காத ஒரு கட்சியாக இருக்க வேண்டும். தமிழர் இனம், மொழி, மண் சார்ந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சியாக இருக்க வேண்டும்.  இது ஒன்று தான் இன்றைய புவிசார் உலக அரசியலில் தமிழக தமிழர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகும். தமிழர்கள் தமிழ்நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இயல்பாகவே இந்தி தேசத்தை விட சிறப்பான நல்லாட்சியை, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை தமிழர்கள் தமிழ் மக்களுக்கு வழங்குவார்கள். இதை ஈழத்தில் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இன உணர்வாளர்கள் மட்டுமே தமிழர்களுக்கான நல்லாட்சியை கொடுக்க முடியுமே தவிர  வேற்றின மக்களால் ஒருபோதும் கொடுக்க முடியாது.

தமிழகத்திற்கு தன்னாட்சி தேவையில்லை வெறும் நல்ல நிர்வாகம் இருந்தால் மட்டுமே போதும் என்ற நினைத்தால் , அதற்கு மீண்டும் ஆங்கிலேயர்களை அழைத்து அவர்களிடம் நாம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விடலாம் . அவன் இந்தி கட்சியை விட சிறப்பான ஆட்சியை கொடுப்பான். ஆகவே நல்லாட்சி கொடுப்போம் என்ற முழக்கத்தை தமிழகம் ஏற்காது.

 தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் மண் ஆகியவற்றை உறுதியாக பாதுகாக்கக் கூடிய  தமிழர் கட்சிகளே தமிழ்நாட்டை ஆள தமிழர்கள் அனுமதிப்பார்கள். இந்தி தேசிய கொடியை உயர்த்தி இந்தி மொழியில் 'பாரத மாதா கி ஜெய்' என்று முழங்கும் இந்தி வெறிக் கட்சிகளையும், தமிழின சிக்கல்களை பற்றி பேசாத கட்சிகளையும் எப்போதும் தமிழர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்ற செய்தியை எளிய மக்கள் கட்சிக்கு தெரியப்படுத்துகிறோம். எளிய மக்கள் கட்சியில் இருக்கும் தமிழர்கள் தமிழகத்தை தாயகமாக கொண்ட தமிழ்த் தேசிய கட்சிகளில் இணைந்து பணியாற்றுமாரும் வேண்டுகிறோம்.















[vuukle-powerbar-top]

Recent Post