Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் பாடலை முழுமயாக படிக்கவும்:-

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை - அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை - ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை - இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்றுகளிப்பேன் - உயிர்
பாயும் இடங்களிலே தன்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் - அங்குக்
காயும் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.

மாட மிதிலைநகர் வீதிவருவேன் - இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்
பாடி யவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் - இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசிமகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்குச்
சென்று கசிந்தமுது நொந்து விழுவேன்
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.

கால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்
கள்ளைக் குடித்தவெறி ஏறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிடவேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்.
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்

ஈழக் கவிஞர் மாவிட்டபுரம் க. சச்சிதானந்தன்.

எழுத்திலும் பேச்சிலும் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட வரி - சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் - என்பது. இந்த வரியின் கனற்கொதிப்பைப் பார்த்த பலர் இதை எழுதியவர் பாரதிதாசன் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இதை எழுதியவர் ஈழத்துக் கவிஞர் பண்டிதர் க. சச்சிதானந்தம் அவர்கள். இவர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை பகுதியில் பிறந்தவர். மகாவித்துவான் நவநீத கிருட்டிண பாரதியிடம் முறையாகத் தமிழ் கற்றவர். ஆங்கிலம் சமற்கிருத மொழிகளிலும் புலமை பெற்றவர். இலண்டனில் படித்து பி.ஏ. ஆனர்சு பட்டமும், குழந்தைகள் உளவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். பள்ளி ஆசிரியராக, கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய ஆனந்தத் தேன் என்ற கவிதைத் தொகுதி 1954 இல் வெளிவந்துள்ளது. இவருடைய யாழ்ப்பாணக் காவியம் போன்ற பல கவிதைகள் அச்சேறாமால் இருக்கின்றன. இவர் கவிதைகள் மட்டுமன்றி அன்னபூரணி என்ற புதினத்தையும் உரைநடையில் பழைய அரசியல் தலைவர் வன்னிய சிங்கத்தின் வரலாற்றையும் எழுதியுள்ளார். அதிர்ச்சி தரும் செய்தி, இவர் இப்பொழுது மனநிலை திரிந்து வவுனியாவில் அலைந்து கொண்டிருக்கிறார் என்பதுதான். ‪#‎தமிழ்வாழ்க‬

நன்றி : சற்றுமுன் சிக்கியவை பக்கம் 
[vuukle-powerbar-top]

Recent Post