Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வள்ளலார் வழங்கிய மனுமுறை கண்ட வாசகம். ஆரிய மனுநீதியை புறக்கணித்த மனுநீதி சோழன் !!

மனுநீதி சோழன் குறித்த கதைகள் காலம் காலமாக தமிழ் மண்ணில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சோழ மன்னன்  நீதி தவறாது ஆட்சி செய்தான் என்று சிலப்பதிகாரம், பரிபாடல், பெரிய புராணம், வள்ளலார் வழங்கிய மனுமுறை கண்ட வாசகம் ஆகிய நூல்கள் சொல்கிறது. எனினும் இது வரலாற்றுக்கு முந்தைய கதையே ஆகும். அறத்தை வலியுறுத்த தமிழ்ச் சான்றோர்கள் உருவாகிய  கதையே அன்றி உண்மையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது என்று அறுதியிட்டு கூற இயலாது.

காரணம் கதையின் தொடக்கத்திலேயே மனுநீதி சோழன் உலகம் முழுவதும் ஆண்டான் என்ற செய்தி வருகிறது. வரலாற்றில் இப்படியான ஒரு செய்தி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரி செய்திக்கு வருவோம். மனு நீதி சோழன் ஆரிய மனுநீதியை நிலைநிறுத்தினான் என்று பலதரப்பட்ட கருத்துகளை காண முடிகிறது. ஆரியர்களும், திராவிட மதவாதிகளும் மனுநீதி சோழன் ஆரிய நீதியை பின்பற்றினான் என்றே கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது என்பதை உறுதி செய்யவே வள்ளலார் மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலை எழுதுகிறார்.

பணம் படைத்தவனுக்கு மட்டுமே நீதி கிடைக்கிறது. எந்த ஒரு ஆதரவும் இல்லாத ஏழைக்கு அதே போன்ற நீதி கிடைப்பதில்லை. மேல் சாதிக்கு ஒரு நீதி கீழ் சாதிக்கு ஒரு நீதி என்ற வழக்கமும் இருந்து வருகிறது. ஆரிய மனுநீதியும் அதைத் தான் சொல்கிறது. ஒரு பிராமணன் கொலை செய்தாலோ கொள்ளை அடித்தாலோ அவன்  தண்டனையில் இருந்து தப்பிக்க சில பரிகாரம் செய்தால் போதுமானது. அதுவே பிராமணன் அல்லாதவன் கொலை கொள்ளை செய்தால் அவனுக்கு மரண தண்டனை மற்றும் கடுமையான கசையடி தண்டனையும் வழங்கப்படும். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற படிநிலை தரத்திற்கு தகுந்தபடி தண்டனையின் வலிமையும் கூடும் குறையும். இது தான் ஆரிய மனுநீதி நூல் வழங்கும் நீதி. இது சமூக அநீதியாகும்.

இப்படியான சமூக அநீதியை தடுக்கவே மனுநீதி சோழன் கதை தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மன்னனுடைய மகன் வீதிவிடங்கன் கவனக்குறைவால் ஒரு கன்றை தேர்க்காலில் ஏற்றி கொன்றுவிடுகிறான். இது தன்னுடைய தவறு என்று வருந்துகிறான். கன்றை ஈந்த பசுவோ ஒரு மனிதனுக்கு இருக்கும் உணர்வோடு ஆராய்ச்சி மணியை தனது கொம்பினால் அடித்து நீதி கேட்கிறது. ஐந்தறிவுள்ள பசு ஆறறிவு உள்ள மனிதனைப் போலவே இக்கதையில் செயல்படுகிறது. பசுவின் உணர்வை புரிந்து கொண்ட மனுச்சோழன்

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றாக் கடை

என்ற திருக்குறளுக்கு ஏற்ப பசுவின் வேதனையை உணர்கிறான். தன்னுடைய ஒரே கன்றை இழந்து வாடும் பசுவிற்கு நீதி வழங்க வேண்டும் என்றெண்ணி தான் தவமிருந்து பெற்ற புதல்வனை  தானும் இழக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான். வீதி விடங்கனையும் அதே போல தேர்காலில் இட்டு கொலை செய்வதே தீர்ப்பு என்று சொல்கிறார் மனுநீதி சோழன்.

இதை கேட்ட சோழனின் அமைச்சர்கள் அனைவரும் மன்னனின்  முடிவை மாற்ற பல ஆலோசனைகளை வழிகளை சொல்கிறார்கள். ஆரிய மனு நீதியின் படி ஒரு பசுக்கொலை நேர்ந்தால் அதற்கான பரிகாரம், சாந்தி நிவர்த்தி செய்தால் போதும். மனுநீதி சோழனின் அவையில் உள்ள வேத மனு நெறியாளர்களான பிராமணர்கள் பசுகொலைக்கு மனிதனை கொலை செய்வது கூடாது என்றும் மனுநீதி அதற்கான பரிகாரத்தை சொல்கிறது என்றும் , பசுமாட்டிற்கு இப்படியான நீதி வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். மேலும் கொலை செய்யப்பட்டது ஒரு பசு அல்ல என்றும் எது ஒரு ஆண்கன்று என்றும் அதனால் அது வாழ்ந்து ஒரு பயனும் இல்லை என்று மன்னனுக்கு நீதி உபதேசம் செய்கிறார்கள் பிராமணர்கள்.  பசுமாட்டையும், பிற உயிர்களையும் கொலை செய்து வேள்வியில் போடும் பிராமணர்கள் இப்படி சொல்வது இயல்பு  தான் என்பதை நன்கு அறிந்த மனுநீதி சோழன், இவர்கள் கூறும் மனுநீதியை ஏற்கவில்லை.

தன்னுடைய முன்னோர்கள் நீதியை நிலைநாட்டி எல்லா உயிர்களுக்கும் சமநீதி கொடுத்துள்ளனர். அந்த வகையில் ஆறறிவுள்ள மனிதனின் தன்மையை பெற்றுள்ள இந்த பசுவிற்கும் அதே சமநீதியை  கொடுக்க வேண்டும் என்று தனது மகனுக்கு மரணதண்டனையை உறுதி செய்கிறார் மனுநீதி சோழன். ஆரிய மனுநீதியை காலில் போட்டு மிதிக்கிறார் மனுநீதி சோழர். இந்த இடத்தில் நாம் இதை வெறும் பசுமாடு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மனித சமூகத்தில் எந்த வித ஆதாயமும், ஆதாரமும் இல்லாத ஒரு ஏழை நீதிகேட்பதாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். நம் சமூகத்தில் எவருக்கும், எந்த படிநிலையில் இருப்பவருக்கும்  நீதி மறுக்கப்படக் கூடாது என்பதே இக்கதையின் கரு. (கதையின் முடிவில் வீதிவிடங்கன், பசுவின் ஆண்கன்று உயிர்பெருவதாக கதை அமைகிறது)

ஆரிய மனுநீதியை நாம் ஏற்கக் கூடாது என்பதற்கும் பல சான்றுகள் இக்கதையில் வைக்கப்பட்டுள்ளது. மனுநீதி சோழன் தான் இப்படியான பாவங்களை செய்தோமோ என்று புலம்பும்போது

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ?
வழிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ?
தானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ?
கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ?

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ?
குடி வரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ?
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ?
தருமம் பாராது தண்டம் செய்தேனோ?

மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ?
உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ?
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ?
பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ?

ஆசை காட்டி மோசம் செய்தேனோ?
வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ?
வேலையாட்களுக்கு கூலி குறைத்தேனோ?
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ?
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்றேனோ?

என்று பலவகையாகப்  பட்டியல் இடுகின்றார். இவை அனைத்தும் ஆரிய மனுநீதிக்கு எதிரானது. ஆரிய மனுநீதி மேல்சாதிக்கு ஒரு நீதியும் கீழ்சாதிக்கு ஒரு நீதியும் சொல்கிறது. இப்படியான அநீதியை உலக மாந்தர் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்பதையே மனுநீதி சோழனின் கதை நமக்கு உணர்த்துகிறது. இக்கதையில் வரும் எவ்வுயிர்க்கும் இரக்கம் காட்டும் நன்னெறியை மக்களுக்கு எடுத்துச் செல்லவே வள்ளலார் மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலை எழுதுகிறார். எல்லோரும் சமம் என்ற தமிழர் அறத்தை, கருத்தையும் உலகிற்கு வலியுறுத்தி உள்ளார் வள்ளலார். ஆரிய பிராமணர்கள் கற்பித்த  மனுநீதியை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்ற செய்தியையும் இக்கதையின் மூலம் கூறியுள்ளார் வள்ளலார் .  இனியும் மனுநீதி சோழன் ஆரிய மனுநீதியை பின்பற்றினான் என்ற தவறான செய்தியை தமிழ் மக்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

[vuukle-powerbar-top]

Recent Post