Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தாலி குறித்து கவலைப்பட வேண்டியது தமிழர்களா ? இந்துக்களா ?

இன்று புதிய தலைமுறை மக்கள் மேடை நிகழ்ச்சியில் ஊடக கருத்து சுதந்திரம் குறித்து பலரும் பேசினார்கள். இந்து மக்கள் கட்சி சார்ந்த ஒரு இந்துவா தமிழரும் பேசினார். தமிழர் மதத்தை சார்ந்த சத்திவேல் முருகனார் என்ற தமிழ் அறிவரும் பேசினார்.

சத்தியவேல் முருகனார் தெளிவாக அவரது கருத்தை முன்வைத்தார். தமிழர்களுக்கு இந்து என்ற அடையாளத்தை சூட்டுவதே பிழையானது என்று கூறினார். தன்னை எங்குமே தமிழர் சமயமான சைவ மதத்தை சார்ந்தவராகத் தான் பதிவு செய்வேன் என்று கூறினார் சத்தியவேல் முருகனார். பொதுவுடைமை கட்சி மகேந்திரன் பேசும் போது தாலி என்பது சங்க இலக்கியங்களில் குறிப்பிடவில்லை, அது பிற்காலத்தில் புகுத்தப்பட்டது  என்று கூறினார். அதற்கு மறுத்துப் பேசிய சத்தியவேல் முருகனார் தாலி என்பதை புறநானூறு இலக்கியம் இணையிழை என்று குறிப்பிடுகிறது என்றும் சிலப்பதிகாரமும் தாலிக்கு இணையான சொல்லை பயன்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இதில் நாம் அறிந்து கொள்ளவேண்டியது, 7 ஆம் நூற்றாண்டு சைவத் திருமுறைகளில் 'மங்கள நாண்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. திருவட்ருபாவிலும் தாலிக்கு இணையான நாண் என்ற சொல் கையாளப்படுகிறது. தமிழர் மறைகள் இவ்வாறு கூற, உண்மையில் ஆரியர்களுக்கு தாலி என்ற பண்பாடே இல்லை என்பதை நாம் அறிதல் வேண்டும். ஆரிய மதப் புராணங்களில் கூட தாலியின் பயன்பாடு குறித்து பேசப்படவில்லை. சங்க காலத்தில் பனை ஓலையில் கணவன் மனைவியின் இணை ஏற்பு உறுதி மொழி சொருகப்பட்டு அதை மனைவியின் கழுத்தில் அணியப்பட்டது என்ற செய்தியை பார்க்க முடிகிறது.

இப்படியான பண்பாடு ஆரிய இந்து  மதத்தில் இல்லவே இல்லை என்று உறுதியாக கூறலாம். அப்படியே ஆரிய  மதத்தில் தாலி சேர்க்கப்பட்டாலும் அது பிற்காலத்தில் தமிழர்களின் பண்பாட்டை ஆரியர்கள் தனதாகிக் கொண்டார்கள் என்று தான் கூறவேண்டும். காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட திருமண விதிமுறை நூலில் தாலி என்பது ஆரியர்கள்  பண்பாடு அல்ல அது திராவிடப் பண்பாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சத்தியவேல் ஐயா சிறப்பாக மேற்கோள் காட்டினார் .

ஆகவே தமிழர் வாழ்வியல் நெறியில் தாலி என்பது பண்டைய காலம் தொட்டு முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் தற்கால சூழ்நிலையில், தாலி வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ப் பெண்களுக்கே உள்ளதே  தவிர ஆரிய இந்துத்வாவாதிகளுக்கு அல்ல. பெண்கள் அவர்களுக்கு விருப்பமிருந்தால் தாலியை தங்கள் திருமண அடையாளமாக ஏற்கட்டும். விருப்பமில்லை என்றால் வேறு ஏதாவது ஒரு அடையாளத்தை ஏற்கட்டும். தமிழர் பண்பாடு என்பதே பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே. நமது தற்கால வாழ்க்கைக்கு, பொருளாதார சூழலுக்கு, வேலை வாய்ப்புகளுக்கு  எது உகந்ததோ அதை தமிழர்கள் ஏற்பார்கள். யாரையும் கட்டாயப்படுத்தும் உரிமை இன்னொருவருக்கு இல்லை.

அதே நேரம் தாலியை உள்ளவாறு ஏற்கும் பெண்களின் உரிமையும், தாலியின் புனிதத்தை நம்பும் தமிழ்ப் பெண்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் தலையிட எந்த ஆடவருக்கும், அமைப்புக்கும் உரிமை இல்லை. தாலி வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழ்ப் பெண்கள் கூடி முடிவெடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். பொதுவெளியில் இது குறித்து பேசுவதற்கு உரிமையும் பாதுகாப்பும் கொடுக்கப்பட வேண்டும். தமிழ்ப் பெண்கள் அணியும் தாலி குறித்து இந்துத்வாதிகளோ அல்லது திராவிடக் கருத்தியலாளர்களோ முடிவெடுக்க எந்த உரிமையும் இல்லை என்பதே நம் கருத்தாக உள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது பட்டாசு தாக்குதல், வன்முறை வெறியாட்டம்  நடத்திய இந்துத்வா அமைப்பினர்கள் இனியாவது மேற்கூறிய உண்மையை புரிந்து கொண்டு தமிழர் பண்பாட்டில், தமிழர் உரிமைகளில்  தலையிடும் போக்கை கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
------------------------------------------------
அண்ணனை பெரியண்ணன் என்றும் சொல்லலாம் தம்பியை சின்னத்தம்பி என்றும் சொல்லலாம். இந்தியாவை (நாவலந் தேயத்தை) இந்திய கூட்டமைப்பு அது தான் பாரதம் என்றும் இந்திய அரசியல் சாசனம் கூறியுள்ளது போலும் கூறலாம். உங்கள் கயமைக்கு ஒரு அளவே இல்லையா?
[vuukle-powerbar-top]

Recent Post