Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திராவிட அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னிருந்தினால் தோல்வி தான் மிஞ்சும் !!

நாம் தமிழர் கட்சியின் எங்கள் தேசம் நூல் வெளியீட்டு காணொளி பார்க்க நேர்ந்தது. தொடக்கத்திலேயே ஈ.வே.ராமசாமியை தூக்கிப் பிடிக்கிறார் அண்ணன் சீமான். சரி சடங்குக்கு ஈ.வே.ரா விற்கு  சீமான் புகழ் மாலை சூட்டுகிறார் என்று பார்த்தால் திராவிடர்கள் இம்மண்ணின் பண்ப்பாட்டு வேரை வெட்டிச் சாய்க்க பயன்படுத்திய அதே கடவுள் மறுப்புக் கொள்கையை முன்வைக்கிறார் சீமான். அவர் கூறும் போது 'நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை , ஆனால் கடவுள் இல்லவே இல்லை என்று தான் சொல்கிறேன்' என்று கூறியுள்ளார் சீமான். மேலும் கடவுள் மறுப்பை தமிழ்த் தேசிய மக்களிடம் கொண்டு செல்வது தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்றும் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்களில் எத்தனை விழுக்காடு கடவுள் மறுப்பு கொள்கையை கைப்பிடிக்கின்றனர் ? 95 விழுக்காடு தமிழ் மக்கள் இன்னும் மத நம்பிக்கையும் மற்றும் கடவுள் நம்பிக்கை உடையவராகத் தான் உள்ளனர். இவர்களை புறந்தள்ளி தமிழ்த் தேசிய அரசியலை இம்மண்ணில் நிறுவ முடியுமா ? கடவுள் மறுப்புக் கொள்கை தான் தமிழீழ தலைவர் பிரபாகரன் பின்பற்றினாரா ? ஒரு அரசியல் கொள்கை என்பது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை உடைப்பதாக இருக்கக்கூடாது. மாறாக பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை காட்டுவதாக இருக்க வேண்டும்.

மேலும் முருக வழிபாடு பற்றி அண்ணன் கூறும் போது முருகனை நாங்கள் கடவுளாக பார்க்கவில்லை எங்கள் முன்னோனாக பார்க்கிறோம் என்று கூறினார் . அதனால் தனக்கு கடவுள் நம்பிக்கை ஏற்பட்டதாக கருதக் கூடாது என்று கூறியுள்ளார் சீமான். அண்ணன் சீமானுக்கு வேண்டுமானால் முருகன் முன்னோனாக இருக்கலாம் , ஆனால் கோடான கோடி உலகத் தமிழர்களுக்கு முருகன் முழுமுதற் கடவுள் என்பதை அறியவேண்டும். குமரகுருபரர், ஒளவை, அருணகிரிநாதர் , வள்ளலார் போன்றவர்கள் முருகனை வெறும் முன்னோராக சுருக்கி விடவில்லை, மாறாக முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாகவே மக்களிடம் காட்டினர். முருகனின் பின்னணியில் உள்ள இயற்கை மெய்யியல் தத்துவத்தை பாடல்கள் மூலமாக மக்களுக்கு எடுத்துக் கூறினர். இன்றும் முருகனப் பெருமான் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக திகழ்வதின் காரணம் முருகன் தமிழர்களுக்கான முழுமுதற் கடவுள் என்ற அடிப்படையே.

ஒரு பக்கம் திராவிடர்களின் கடவுள் மறுப்புக் கொள்கையும், மறுபக்கம் முருகனை முன்னோராக வழிபடச் சொல்வதும் முன்னுக்கு பின் முரணான செய்கையே ஆகும். இப்படியான கருத்தியலை தமிழ்த் தேசிய இன மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை அண்ணன் சீமான் உணரவேண்டும். ஏன், நாம் தமிழர் கட்சியினரே கடவுள் மறுப்புக் கொள்கையை முழுவதும் ஏற்கமாட்டார்கள். கடவுள் மறுப்பு அல்லது கடவுள் ஏற்பு என்பது தனிமனித விருப்பம் சார்ந்தது . இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஒரு கடவுளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்று சொல்வதும் கடவுளை கட்டாயம் மறுக்க வேண்டும் என சொல்வதும் தனிமனிதனின் இயற்கை அறிவுத் தேடலை முடக்கும் செயலாகும். எது சரி எது தவறு என்பதை சமூகம் முடிவு செய்து கொள்ளட்டும். இப்படியான பண்பாட்டு வழிப்பாட்டு உரிமையை தமிழ்த் தேசிய கட்சிகள் வலிந்து தடுக்க முன்வரக் கூடாது என்பதே நம் தாழ்மையான கருத்து. அண்ணன் சீமான் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டுமே தவிர திராவிடர்கள் முன்னிறுத்தும் கடவுள் மறுப்பு கொள்கையை பொதுவில் முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.









[vuukle-powerbar-top]

Recent Post