Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

யார் போலித் தமிழ்த் தேசியவாதிகள் ?

தற்காலத்தில் பலரும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் என்ற சொல்லாடலை பயன்படுத்தி வருவதை நாம் பார்க்க முடிகிறது . இப்படியான சொல்லை யார் உருவாக்கினார்கள் யாருக்காக உருவாக்கினார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்த சொல்லை முதலில் உருவாக்கியவர்கள் வேறு யாரும் இல்லை. தமிழர்களை எதிரியாக பார்க்கும் திராவிடக் கருத்தியலாளர்கள் தான் இந்த சொல்லை உருவாக்கினார்கள். அவர்களே அதிக அளவில் இந்த சொல்லை இணையத்தில் பரப்பியும் விட்டார்கள். குறிப்பாக தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்து செல்லும் நபர்களை சாதி வெறியர்கள் என்று முத்திரை குத்தி அவர்களுக்கு போலி தமிழ்த் தேசியவாதி என்று பட்டமளித்தனர் திராவிடக் கருத்தியலாளர்கள்.

அடுத்ததாக திராவிடர்கள் தமிழ்த் தேசியர்களை பார்த்து சொல்லும் அடைமொழி 'ஆரியக் கைக்கூலி , ஆரியத்தின் வேர் ' என்பதாகும். இதை இக்காலத்தில் உள்ள திராவிடர்கள் மட்டும் சொல்லவில்லை , திராவிடத்தின் தந்தையே தொல்காப்பியரை ஆரியக் கைக்கூலி என்று ஒரு நூலில் கூறியுள்ளார். அதிலிருந்து இன்று வரை திராவிடர்கள் தமிழர்களை ஆரியக் கைக்கூலி என்று அழைத்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. ஆதலால் இரண்டு பட்டங்களை  திராவிடர்கள் தமிழர்களுக்கு சூட்டி வருகிறார்கள். ஒன்று சாதி வெறியர் இன்னொன்று ஆரியக் கைக்கூலி என்பதாகும். இப்பட்டங்களை  தமிழர்களுக்கு நிரந்தரமாக சூட்டும் விதமாகவே போலித் தமிழ்த் தேசியவாதி என்ற அடைமொழியும் திராவிடர்களால் உருவாக்கப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க உண்மையில் யார் போலித் தமிழ்த் தேசியவாதி என்பதில் நாம் தெளிவு பெறவேண்டும் . திராவிடத்தில் நாம் போலித் திராவிடவாதி என்று நாம் யாரையும் அழைப்பதில்லை.காரணம் திராவிடம் என்பதே போலியானது , அதனால் போலித் திராவிடம் என்ற பதமே தவறானது.

தமிழ்த் தேசியவாதிகளில் போலிகள் யார் என்று சிலரை ஆதாரங்களுடன் தொகுத்துக் கூறலாம்.

௧. தமிழ்ச் சாதிகள் அனைத்தும் சமம் என்பதை ஏற்காது தன்னுடைய சாதியே மேலான  சாதி என்று சாதிப் பெருமையை மட்டுமே பேசி தமிழினப் பெருமையை இரண்டாம் இடத்திற்கு தள்ளுபவர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள். சாதிகளுக்கே முதலிடம் இனத்திற்கு இரண்டாம் இடம் என்று கூறும் நபர்கள் இவர்கள்.

௨. தமிழர்கள் கடைப்பிடிக்கும் மதங்கள் அனைத்தும் சமம் என்பதை ஏற்காது, தன்னுடைய மதம் மட்டுமே சிறப்பானது, மேலானது  என்று பேசி தமிழினத்தின் பெருமையை இரண்டாம் நிலைக்கு தள்ளும் தமிழர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள். மதங்களுக்கே முதலிடம் இனத்திற்கு இரண்டாம் இடம் தான் என்று கூறும் நபர்கள் இவர்கள்.

௩. தமிழ், தமிழகம், தமிழர்களை முன்னிலைப்படுத்தாமல் இந்தியத்தின் பெருமையை  வாய்ப்பு உள்ள நேரங்களில் முன்னிலைப்படுத்தும் நபர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.

௪. தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக கூறிக் கொண்டு தமிழர்களுக்கான அடையாளத்தை மறுத்து அவர்களுக்கு திராவிடம் என்ற அடையாளத்தை திணிப்பவர்கள், திராவிடத் தந்தையை தமிழர்களின் தந்தையாக ஏற்க வேண்டும் என்று சொல்பவர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள் .

௫. தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்று சொன்னால், அதெப்படி முடியும், தமிழ்நாட்டின் நலனுக்காக நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் ஆளலாம், தமிழர்கள் மட்டுமே ஆளவேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது என்று சொல்பவர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.

௬. தமிழர்கள் சாதியவாதிகள், மதவாதிகள் என்று அடிக்கடி  கூறி தமிழினத்திற்கு என்று எந்த ஒரு சிறப்பும் இல்லை , பெருமையும் இல்லை, வரலாறும் இல்லை , தமிழ் என்பது அறிவியல் மொழி அல்ல அது ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொல்பவர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.
௭. தமிழ் தான் திராவிடம் திராவிடம் தான் தமிழ் என்று சொல்பவர்கள் அனைவரும் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.

௮. தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது போல பாசாங்கு காட்டி தமிழ் தமிழர் தமிழர் நாடு என்பதை மறுக்கும் அனைவரும் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.
௯. தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பது போல நடித்து தமிழர்களுக்கு என்று ஒரு மெய்யியல் கோட்பாடு இல்லை, பண்பாடு இல்லை இல்லை , தமிழர் என்ற இனமே இல்லை என்று சொல்பவர்கள் அனைவரும் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.

௧௦. தமிழர்களுக்கு, தமிழுக்கு ஆதரவாக நாங்கள் தான் போராடுகிறோம் என்று சொல்லி இன்னொரு பக்கம் தமிழர் அடையாளத்தை எந்த வகையிலும் ஏற்க மறுக்கும் எவரும் போலித் தமிழ்த் தேசியவாதிகள்.

இப்படியாக யார் போலித் தமிழ்த் தேசியவாதிகள், யார்  இதற்கு நேர்மாறாக உண்மையான தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்து செல்கிறார்கள்  என்பதை தமிழர்கள் பகுப்பாய்வு செய்து உணர்தல் வேண்டும். போலித் தமிழ்த் தேசியத்திற்கு முற்றுப் புள்ளி வைப்போம். உண்மையான தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துச் செல்வோம். #தமிழ்வாழ்க













[vuukle-powerbar-top]

Recent Post