Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிள்ளைகளிடம் ஆங்கிலத்தை திணித்து தமிழை அழிக்கும் சுட்டி தொலைக்காட்சி !

நம் குழந்தைகள் அதிகம் ரசித்து பார்ப்பது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்  தான். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை வழங்குவதில் முதன்மை இடத்தை சுட்டி தொலைக்காட்சி பிடித்துள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருந்த நிலையில் தமிழிலும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை சுட்டி தொலைக்காட்சி மூலமாக சன் குழுமம் உருவாக்கி கொடுத்தது.

குழந்தைகளை மகிழ்விக்கும் இந்த தமிழ்த் தொலைக்காட்சியின் நோக்கம் இப்போது முற்றிலும் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழில் நிகழ்ச்சி வழங்க வேண்டும் என்ற நிலை மாறி இப்போது சுட்டி தொலைக்காட்சி ஆங்கிலத்தை அதிக அளவில் ஊக்குவித்து வருகிறது. காலை நிகழ்ச்சியில் ஆங்கில சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ஒரு உயிரோவிய (கார்டூன்) நிகழ்ச்சி நடத்துகிறது. ஒவ்வொரு நாளும் ஆங்கிலத்தை இப்படி குழந்தைகளிடம் வளர்க்கிறது சுட்டி தொலைக்காட்சி. ஆங்கிலத்தை தான் பள்ளிகள் ஏற்கனவே சொல்லிக் கொடுக்கின்றன. மேலும் பல ஆங்கில சிறுவர் தொலைகாட்சிகள் உள்ளன . இவையெல்லாம் போதாதென சுட்டி தொலைக்காட்சி வேறு ஆங்கிலத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா ? பிழையில்லாமல் தமிழை உச்சரிக்க கற்றுக் கொடுக்க வேண்டிய தமிழ்த் தொலைக்காட்சி பிழையில்லாமல் ஆங்கிலம் உச்சரிக்க சொல்லிக் கொடுக்கிறது என்பது எவ்வளவு வேதனையான விடயம்!

மேலும் , சுட்டி செய்திகள் என்ற ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது இந்த நிறுவனம். இந்நிகழ்ச்சியில் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கலந்து பேசி தமிழை கொலை செய்து வருகிறது சுட்டி தொலைக்காட்சி நிறுவனம். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள குழந்தைகள் தூய தமிழில் பேச முடியாமல் முடமாகி விட்ட நிலையில், இப்படியான நிகழ்ச்சிகள் மூலமாக தமிங்கலம் என்ற புதிய மொழியை பிள்ளைகள் கற்றுக் கொள்கிறார்கள். இப்படித் தான் செய்திகள் இருக்கும் என்று எண்ணத் தொடங்குகிறார்கள் குழந்தைகள். செய்தியை கூட தமிழில் வழங்க முடியாத நிலையில் தமிழ்க் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதையே சுட்டி தொலைக்காட்சி மக்களுக்கு சொல்கிறது. செய்தி நிகழ்ச்சி மட்டுமல்லாது, சிறுவர்களுக்கான எல்லா உயிரோவிய நிகழ்ச்சிகளையும் ஆங்கிலம் கலந்த தமிழில் தான் வழங்கி வருகிறது சுட்டி தொலைக்காட்சி. புதிய தமிழ்க்கலைச் சொற்களை உருவாக்குவது, அறிவியல் சொற்களை உருவாக்குவது , நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் தமிழை பயன்படுத்துவது போன்ற  பல செயல்களை ஊக்குவிக்க வேண்டிய தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்கள் ஆங்கில மோகத்தில் தமிழை கொலை செய்து வருவது கண்டிக்கத்தக்கது.

குழந்தைகளிடம் தூய தமிழை கொண்டு செல்ல வேண்டிய இப்படியான தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆங்கிலத்தை திணித்து , தமிங்கலம் என்ற புதிய மொழியை நம் குழந்தைகளிடம் திணிப்பதை  தமிழ்ப் பெற்றோர்கள் கண்டிக்க முன்வர வேண்டும். திருக்குறள், ஒளவை பாடல்கள், நாலடியார், சித்தர் சிந்தனைகள் போன்ற அற நூல்களை குழந்தைகளிடம் சிறப்பாக இத்தகைய ஊடகங்கள் கொண்டு செல்ல வேண்டும். அறிவியலை தமிழ் மொழியிலேயே வழங்க வேண்டும். இப்படி செய்தால் தான் குழந்தைகளிடம் மொழிப் பற்று , தமிழ்நாட்டுப் பற்று, நல்லறிவு, நல்லொழுக்கம் போன்ற நற்குணங்கள் மேலோங்கும்.

சுட்டி தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும் சுட்டி தொலைக்காட்சி நிறுவனத்தை அழைத்து கண்டிக்க வேண்டும் . நிகழ்ச்சிகளை தமிழில் முழுமையாக வழங்க வலியுறுத்த வேண்டும். பிள்ளைகள் தூய தமிழில் பேச, தமிங்கலம் இல்லாத நிகழ்சிகளை வழங்கவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல தமிழில் எழுத பேச பெற்றோர்கள் ஊகுவிக்க வேண்டும். சுட்டி தொலைக்காட்சி நிறுவனம் தற்போதுள்ள ஆங்கில ஆதரவு கொள்கையை மாற்றிக் கொண்டு நல்ல தமிழை குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கோரிக்கை வைக்கிறது .

  
[vuukle-powerbar-top]

Recent Post