Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிங்கை தந்தை லீ  குவான் மரணம். உலகத் தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி.  இந்திய அரசுக்கான செய்தி !!

எங்கோ பிறந்து , எங்கோ வாழ்ந்து , எங்கோ மறைந்த ஒரு தலைவருக்காக தமிழகத்தில் உள்ள குக்கிராமத்தில் கண்ணீர் அஞ்சலி பதாகைகளை பார்க்க முடிகிறது. சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ வின் மரணம் உலகத் தமிழர்களை உலுக்கியது என்றால் அது மிகையல்ல. சமூக வலைத் தளங்கள் முழுவதும் லீ குவான் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியும் வீர வணக்கமும் நிரம்பி வழிகிறது. முகநூல் மட்டுமில்லாது தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களிலும் லீ குவான் அவர்களின் மரணத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மன்னார்குடி, ஆலங்கோட்டை கிராமவாசிகள் லீ குவான் அவர்களுக்கு பதாகை வைத்து  மரியாதை செய்துள்ளனர்.

இப்படி வேறு எந்த தமிழர்  அல்லாத இந்திய தேசிய  தலைவரின் மரணத்திற்கும் தமிழர்கள் இவ்வாறு கண்ணீர் அஞ்சலி செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது தமிழர்களுக்கு  சிங்கை அரசு முழு உரிமை கொடுத்து அவர்களை சிங்கை தேசியத்தில் உள்வாங்கியது. தமிழ் மொழிக்கு உரிமை கொடுத்தது . தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கியது . தமிழர்களுக்கு சிங்கை அரசியலில் முக்கிய முடிவெடுக்கும் பதவிகளை கொடுத்தது. எல்லா மதத்தினருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டது. தேசிய இனங்கள் யாவும் மதிக்கப்பட்டது. இதனால் சிங்கை தமிழர்கள் சிங்கை நாட்டை தங்கள் சொந்த வீட்டை போலவே மதிக்கத் தொடங்கினர் . இது தங்களுக்கான  நாடு  என்பதை உணர்ந்தனர் . இதனால் சிங்கை நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது . இது தான் சிங்கை நாட்டின் வெற்றிக்கான காரணங்கள் .

ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழ் . இந்தி மக்களை , இந்தி மொழியை மட்டுமே முன்னிறுத்துகிறது இந்திய அரசு . இந்தி அல்லாத பிற மொழிகளையும் , பிற மொழியினரையும் இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறது இந்திய அரசு . தமிழ்த் தேசிய இன மக்கள் மட்டுமல்லாது பிற தேசிய இன மக்களின் உணர்வுக்கு எப்போதும் இந்தி அரசு மதிப்பளிப்பதில்லை . தமிழ் மொழி உள்ளிட்ட பிற தேசிய மொழிகளை ஆட்சி மொழியாக்க மறுத்து வருகிறது . தமிழர்களின் இறையாண்மையில் தலையிடுகிறது. தமிழர்களின் பண்பாட்டை வரலாற்றை அழிக்க நினைக்கிறது  இந்தி அரசு . இதனால் தமிழர்கள் யாரும் இந்தி அரசுக்கு ஆதரவாக செயல்பட முடியாத நிலை உருவாகிறது. இந்தியாவை ஒரு பகை நாடாக பார்க்கும் நிலையை இந்திய அரசே இப்போது உருவாக்கி உள்ளது . தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு எந்த வித ஆதரவும் கொடுக்காமல் மீனவர் படுகொலை, ஈழத் தமிழர் படுகொலை என அனைத்திலும்  இந்திய அரசு வேடிக்கை மட்டுமே பார்த்தது.

இந்திய அரசின் இப்படியான இனப்பகை கொள்கை காரணமாக இந்தி அல்லாத தேசிய இன மக்கள் இந்தியத்தின் நம்பிக்கை இழந்து விட்டனர் . இதற்கு முழு பொறுப்பு இந்திய  ஆட்சியாளர்களையே சாரும். சிங்கையின் தந்தை லீ குவான் அவர்களின் செயல்களை பார்த்தாவது இந்திய பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தேசிய இனங்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் . எல்லா மொழிகளையும் இனங்களையும் மதித்து சம உரிமைகள் வழங்கும் போது தான் ஒரு நாடு முன்னேறும் என்ற பாடத்தை இந்திய அரசு கற்றுக் கொள்ளவேண்டும் . அதற்கு இதுவே சரியான தருணம்.

[vuukle-powerbar-top]

Recent Post