Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் அனைத்து தகவலும் தமிழில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது!

சென்னையில் அமைந்தகரையில் உள்ள பில்ராத் மருத்துவமனையில் பொதுமக்கள் பார்க்கும் அனைத்து தகவலும் தமிழிலும் கண்டிப்பாக உள்ளவாறு செய்துள்ளனர் மருத்துவமனையின் நிர்வாகக் குழு. ஒவ்வொரு அறையின் பெயர்பலகையும் இரு மொழியில் உள்ளதை நாம் இங்கு காணமுடிகிறது. கூடியமட்டும் அறிவியல் கலைச்சொற்களையும் பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. செவிலியர் அறை, மருத்துவர் அறை, கதிர்வீச்சு அறை, ஊடுகதிர் அறை, குருதி பரிசோதனை அறை, பணம் செலுத்துமிடம், கழிவறை, மின்தூக்கி, உணவகம் என அனைத்து பெயர்பலகையும்  தமிழில் கட்டாயமாக உள்ளவாறு செய்துள்ளது இந்த மருத்துவமனை.

அதுமட்டுமல்லாது நோயாளிகளின்  உணவுத் திட்டம், நோயாளிகள் கருத்துக் கேட்பு படிவம், நோயாளிகளின் உரிமைகள் என்னென்ன போன்ற  பல தகவல்கள் தமிழில் இங்கு கொடுக்கப்படுகிறது. தமிழ் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை இந்த மருத்துவமனை சிறப்பாக செயல்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக மியாட் மருத்துவமனை தமிழில் அறிவிப்புகள் கொடுத்ததை பலரும் முகநூலில் பகிர்ந்திருந்தனர். சிங்கை மற்றும் கனடா நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தமிழில் அறிவிப்புகள், தகவல்கள் இருப்பதை பலமுறை முகநூலில் தமிழர்கள் பதிவு செய்திருந்தனர். அதனை தொடர்ந்து இப்போது பில்ராத் மருத்துவமனை தமிழில் அனைத்து தகவலும் வழங்குவது தமிழ் மக்களின் மொழி உரிமையை மதிக்கும் செயலாகும். சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை இந்தியில் 'நமஸ்தே' என்று தமிழ் மக்களிடம் திணித்து வரும் நிலையில் பில்ராத் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் தமிழில் தகவல் வழங்குவது பாராட்டுக்குரியது. இதை பின்பற்றி சென்னையில் உள்ள அனைத்து மக்கள் சேவை நிறுவனங்களும் தமிழில் கட்டாயம் தகவல்கள் வழங்க முன்வர வேண்டும். தமிழர்கள் நடத்தும் நிறுவனங்களில் தமிழை அதிகாரமிக்க அலுவல் மொழியாக பயன்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்

பின்குறிப்பு : மருத்துவமனையில் வெளிப்படையாக  படம் பிடிக்க முடியாத நிலையில் சில படங்களை மட்டுமே எடுக்க நேர்ந்தது . அதுவும் தெளிவுத்திறன் குறைவான படங்களாகவே வந்துள்ளது. 
[vuukle-powerbar-top]

Recent Post