Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கௌரவக்  கொலைகள் - தமிழர்களுக்கு அவமானம்!  திராவிடர்களுக்கு வெகுமானம் !!

தமிழர்கள் குறிப்பாக சாதியை முன்னிலைப்படுத்தும் தமிழர்கள் இந்தப் பதிவை அவசியம் படிக்கவும். அண்மையில் தமிழகத்தில் ஒரு கௌரவக் கொலை நடைபெற்றுள்ளது. மகள் வேறு சாதி ஆடவனை காதலித்து மணமுடிக்க இருக்கிறாள் என்ற தகவலை அறிந்த தந்தை தன்னுடைய சொந்த மகளையே எரித்துக் கொன்றுள்ளார். இது படிப்பவர் எவரையும் நிச்சயம் உலுக்கும் செய்தியாகும். சாதி என்ற ஒற்றை காரணத்திற்காக பெற்றெடுத்த மகளை கொல்லத் துணிவது எந்த வகையிலும் மனித சமூகம் ஏற்காது. ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம் ஐந்தரவு விலங்குகளுக்கு கூட இரக்கம் காட்டுகிறோம். ஆனால் மனிதர்களிடம் அன்பு காட்டுவதில்லை.

'சாதி இரண்டொழிய வேறில்லை', 'சாதியும் மதமும் பொய்' , 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலக நீதியை போதித்த தமிழினத்தில் சாதியின் பெயரால் நிகழும் கொலைகள் தாங்க முடியாத துயரத்தை தருகிறது. ஒருக்காலும் இதை நாம் அனுமதிக்க முடியாததாக உள்ளது. தமிழ்ச் சாதிகளில் உள்ள எவரும் புரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் உள்ளன.

வரலாற்றில் தமிழர்களுக்குள் இனக்குழுக்கள் இருந்துள்ளன. ஆனால் ஒரு நாளும் இனக் குழுக்கள் இடையே ஏற்றத் தாழ்வுகள் இருந்தது கிடையாது. அனைத்து சாதிகளும் சமம் என்ற நிலையே இருந்து வந்துள்ளது . தொழில் அடிப்படையில் மட்டுமே இனக் குழுக்கள் இருந்துள்ளன அன்றி பிறப்பின் அடிப்படையில் அல்ல. அதனால் தமிழ்ச் சாதிகள் அனைத்தும் ஒரே தன்மையையுடைய சம நிலை பொருந்திய சாதிகளே ஆகும். அந்நியர்கள் தமிழ்ச் சாதிகளிடையே  ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி நம்மை பிரித்து ஆண்டனர். இங்கு தமிழ்ச் சமூகத்திற்கு சாதி என்பது இப்போது எந்த வகையிலும் தேவையற்றது என்பதை தமிழர்கள் உணர்தல் வேண்டும். நாம் அனைவரும் தமிழர்கள் என்ற சகோதர உரிமை நமக்குள் ஏற்படுதல் வேண்டும்.

நாம் நமக்குள் சண்டையிட்டுக் கொண்டால் யாருக்கு இலாபம் ? ஊர் இரண்டுபட்டால் யாருக்கு இலாபம் ? நம்மை ஏய்த்துப் பிழைக்கும் திராவிடர்களுக்கு தான் அது இலாபம் . தமிழர்கள் இன்னும் சாதி வெறியர்களாக உள்ளனர் அதனால் தமிழர்களுக்கான அரசு ஒன்று தேவையில்லை, தமிழர் ஆட்சி செய்யவும் தேவையில்லை , நாங்களே தமிழர்களை ஆட்சி செய்ய தகுதியானவர்கள் என்று திராவிடர்கள் ஓடோடி வருவார்கள். திராவிட இயக்கங்கள் தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று எள்ளி நகையாடுவார்கள். தமிழ் சான்றோர்கள் கற்பித்த அற நூல்களை காலில் போட்டு மிதித்து தமிழினத்தை அவமானப்படுத்துவார்கள் திராவிடர்கள் . இப்படியான அவமானம் நமக்கு தேவையா என்பதை தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சாதி மதம் என்னும் சழக்கை அவரவர் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள் . அதை வெளியில் கொண்டு வர வேண்டாம். பிள்ளைகள் யாரை காதலித்தாலும் அவர்களிடம் கனிவாக பேசி  அவர்கள் காதல் உண்மையானதென்றால் அதற்கு ஆதரவு தாருங்கள் . உயர் சாதி தாழ்ந்த சாதி என்ற பொய்யான பிம்பத்தை தூக்கி நிறுத்தாதீர்கள். நாம் அனைவரும் சமம் என்ற உண்மையை உணருங்கள் . நம்மை தாழ்ந்த சாதி என்று சொன்னவர்கள் அனைவரும் சொகுசாக வாழ்கிறார்கள். நம்மிடையே  சாதிப்  பிரிவினையை ஏற்படுத்தியவர்கள்  அரசியல் இலாபம் அடைந்துள்ளனர்.  ஆனால் நாமோ அடித்துக் கொண்டு சாகிறோம். சூத்திரன் என்பதோ தலித் என்பதோ தாழ்ந்தவர்கள் என்பதோ எப்போதும் நமது மரபில் இருந்தது இல்லை. இடையில் வந்ததை இடையிலேயே நாம் விட்டொழிக்க வேண்டும். நமக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருப்பதால் நமது எதிரிகள் எளிதில் நமது ஒற்றுமையின்மையை  பயன்படுத்து நம்மை உளவியல் ரீதியாக அடிமைப்படுத்துவார்கள் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதியால் தமிழர்கள் பிரிவதும், சாதியை காரணம் காட்டி கௌரவக் கொலைகள் போன்ற கொடுமைகள் நடப்பதும் தமிழினத்திற்கு பெருத்த அவமானமாகும். உலக நீதி போதித்த வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்ந்த இந்த தமிழ் மண்ணுக்கு நாம் செய்யும் பெரும் கேடாகும். தமிழர்கள் இப்படியே சாதியை போற்றி வாழ்ந்து கொண்டிருத்தால் திராவிடம் மட்டுமே இம்மண்ணில் செழித்து வாழும். தமிழர்கள் நாம் அனைத்தும் இழந்த அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்க நேரிடும்.

ஆகவே சாதியை முன்னிருந்தும் தமிழர்கள் இனியாவது சாதி என்னும் பொய்யான கருத்தியலில் இருந்து மீண்டு வெளிவர வேண்டும். தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும். தமிழ்த்தேசிய கட்டமைப்பை நமது ஒற்றுமையால் உருவாக்கிட வேண்டும். திராவிடர்களும் நம் இன எதிரிகளும் நம்மை எள்ளி நகையாட நாம் அனுமதிக்கக்கூடாது என்பதை உறுதி செய்தல் வேண்டும்.  
[vuukle-powerbar-top]

Recent Post