Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திராவிட அரசியலுக்கு முடிவு கட்டுவது ஒன்று தான் உலகத் தமிழர்களை பாதுகாக்கும். அதில் தான் ஈழ விடுதலையும் அடங்கியுள்ளது !!

தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஆகட்டும் , ஊழலில் உச்சத்தை தொடுவது ஆகட்டும் திராவிட அரசுகளுக்கு நிகர் வேறு யாருமில்லை. தமிழ் மொழியையும் தமிழினத்தையும்  இருந்த இடம் தெரியாமல் அழிக்க வேண்டும் என்பதில் திராவிட அரசுகுகளுக்கு மாற்றுக் கருத்தில்லை. இன்று தமிழ் இனம் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் திராவிட அரசுகளின் பெரும்பங்கு உள்ளது என்பதை மறைக்க முடியாது. இந்திய அரசு தமிழர்களின் மீது நடத்தும் மறைப்முகப் போருக்கு பெரும் துணையாக இருப்பதும் இந்த திராவிட கூட்டங்களே. இதனால் தமிழர்களின் வாழ்வுரிமை கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க் கொண்டிருக்கிறது. இந்த திராவிடக் கூட்டங்களை வலிமை இழக்கச் செய்யாமல் தமிழர்களால் தங்களை பாதுகாத்துக் கொள்ளுதல் என்பது இயலாத காரியம்.

2009 ஈழத்தில் இனப்படுகொலை போர் முடிவு பெற்ற பின்னரும் தமிழகத்திலும் தமிழ் ஈழத்திலும் தமிழர்கள் எந்த விதமான அரசியல் வலிமை பெறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் ஈழ ஆதரவாளர்களுக்காக சில வெற்று தீர்மானங்களை அதிமுக அரசு கொண்டு வந்தது. ஆனால் அந்த தீர்மானம் எதையும் நிறைவேற்ற அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை போர் குறித்த எல்லா நகர்வுகளும் திமுகவிற்கு தெரியாமல் இருக்க முடியாது. அப்போதைய தமிழக அரசின் கண்காணிப்பில் தான் இந்திய அரசு சிங்கள இராணுவத்திற்கு எல்லா உதவிகளையும் வழங்கியது. தமிழகம் வழியாகவே எல்லா ராணுவ உதவிகளும் இலங்கை சென்றடைந்தது . தமிழக உளவுத் துறைக்கு இது தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பு இல்லை . மேலும் போரை நிறுத்த திமுக முயற்சி மேற்கொண்டது போல சில நாடகங்களை நடத்தி திமுக தப்பிக்க நினைத்தது. இதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும் இந்த இனப்படுகொலையில் திமுகவை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படவில்லை. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவும் இதில் விசாரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது . திமுக ஆட்சி முடிந்த பின்னர் ஏன் அதிமுக அரசு திமுகவை இனப்படுகொலை குறித்து விசாரிக்கவில்லை? திமுக ஊழலுக்கு விசாரணை நடத்தும் அதிமுக அரசு இனப்படுகொலையில் திமுகவின் பங்கு என்ன என்று ஏன் இதுவரை அறிக்கை கொடுக்கவில்லை? இதற்கு காரணம் இரண்டு கட்சிகளும் இனப்படுகொலைக்கு துணை போய் உள்ளன என்பதை நாம் அறியவேண்டும்.

இதுவே தமிழர் அரசு என்றால் இனப்படுகொலைக்கு நேர்மையான விசாரணையை தமிழகத்தில் இருந்தே தொடங்கி இருக்கும் அல்லவா ? ஐ.நா. விசாரணைக் குழு தமிழகம் வருவதை கூட இந்திய அரசு தடை செய்தது . இதற்கும் திராவிட அரசு எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை . தமிழக அரசு, தானே முன்வந்து தமிழகத்தில் ஏன் விசாரணையை தொடங்கவில்லை என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கேரளா அரசு, கேரளா எல்லையில் இத்தாலி மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு தானே முன்வந்து விசாரணை நடத்தி நீதியை பெற்றுக் கொடுக்க முடிகிறது . ஆனால் தமிழகத்தில் அவ்வாறு சாத்தியமில்லாமல் உள்ளது. ஈழமக்களுக்காக விசாரணை நடத்தாவிட்டாலும் , சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்காக விசாரணை நடத்தியிருக்கலாம் தமிழக அரசு. ஆனால் அதையும் இந்த திராவிட அரசுகள் செய்யவில்லை.

எனவே தான் நாங்கள் கோருகிறோம் , இனப்படுகொலைக்கான விசாரணையை தமிழகத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்று. இங்கிருந்து கொண்டு அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் விசாரிக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தாலும்,  யார் அவர்களை விசாரிப்பது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. தமிழக அரசை வைத்து ஒரு விசாரணை நடத்த முன்வந்தாலும் திராவிடக் கட்சிகள் எந்த விசாரணையும் நடத்த முன்வராது . இங்கு தமிழக அரசியலில் தமிழர்கள் வலிமையடையாமல் நம்மால் எந்த விசாரணையும் நடத்த முடியாது. இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து விசாரணை நடத்த வேண்டுமென்றாலும் தமிழக அரசியலை தமிழர்கள் கைப்பற்ற வேண்டும். எப்படிப் பார்த்தாலும் தமிழர் அரசு அமைவது ஒன்று தான் உலகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு என்ற உண்மையை  நாம் அனைவரும் உணர வேண்டும்.

ஈழப்படுகொலை, மீனவர் படுகொலை , 20 தமிழர்கள் படுகொலை என எதுவானாலும் தமிழர் அரசின் மூலமாகத் தான் தீர்வு எட்டப்படுமே தவிர திராவிட அரசுகளால் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எனவே திராவிட அரசியலுக்கு முடிவு கட்டுவோம் . தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்போம். இனி வரும் காலத்திலாவது தமிழர்களை பாதுகாக்க தமிழர் அரசை உடனடியாக நிறுவ நாம் உறுதி ஏற்போம்.[vuukle-powerbar-top]

Recent Post