Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எமது நெல்லை சுற்றுலா - ஒரு பார்வை ! 

எனது நெருங்கிய உறவின் இல்ல நிகழ்சிக்காக நாம் நெல்லை செல்ல நேர்ந்தது. நெல்லைக்கு சென்ற காரணத்தால் அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும், இயற்கை எழில் சார்ந்த இடங்களையும் பார்வையிட வேண்டும் என்று எண்ணினோம். 

முதல் கட்டமாக நெல்லை நகரில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள இயற்கையான அருவிகள் கொண்ட பாபநாசம் பகுதிக்கு சென்றோம். அங்குள்ள பொதிகை மலையில் இருந்து பல அருவிகள் கோடை காலத்திலும் வற்றாமல் மக்களின் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்தது. மலை அடிவாரத்தின் கீழே மக்கள் இன்பமாக ஆற்றில் குளித்து விளையாடி மகிழ்ந்தனர் . மலையின் மேலே பெரிய அணைகட்டி நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது தமிழக அரசு . நீர் வரத்து அதிகமாகும் போது போதிய அளவு மின்சாரம் கிடைகிறது.  கோடை காலத்திலும் மலையின் மேலே அருவி தடம்புரண்டு ஓடுவதால் மக்கள் அருவியில் குளிக்க பெரும் ஆர்வத்தை காட்டுகிறார்கள். நீச்சல் தெரிந்தால் ஆழமான பகுதிக்கும் சென்று அருவியில் குளிக்கலாம் . இருப்பினும் சற்று ஆபத்தான பகுதி இது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.  

அடுத்ததாக கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கோவிலான நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றோம். தமிழர் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய கோவில் இது . சிற்பக் கலைக்கு பெரும் எடுத்துக்காட்டாக இந்த நெல்லை கோவில் விளங்குகிறது. பல ஆட்சிகளை கண்ட இக்கோவிலை முதலில் உருவாக்கியவர்கள் பாண்டியர்கள். மிகப் பிரமாண்டமாக இக்கோவிலை வடிவமைத்து உள்ளனர் பாண்டியர்கள். பிற்காலத்தில் இப்பகுதி முழுவதும் நாயக்கர்களின் கட்டுப் பாட்டில் வந்துவிட்டது. இவர்களும் சிற்பக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இவர்கள் காலத்தில் தமிழ்ச் சிற்பிகளின் கைவண்ணத்தில் மிக நேர்த்தியான உயிர் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணிலும் மூன்று சிற்பங்களை வடிவமைத்து உள்ளனர் சிற்பிகள்.  உலகில் எங்கு சென்றாலும் இப்படியான பாறை சிற்பங்களை காண முடியாது. அவ்வளவு நுணுக்கமான வேலைபாடுகள் கொண்டதாக உள்ளது இந்த சிற்பங்கள். முருகன், சிவன், அம்மைக்கு தனித்தனியே மண்டபங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மண்டபத்திலும் சிற்பக்கலைகள் கண்கொள்ளா காட்சி. இன்னொரு அதிசயம் இந்த கோவிலில் உள்ளது . அது தான் இசைத் தூண்கள். தமிழர்களின் ஈடு இணையற்ற இசை அறிவை தூண்கள் வாயிலாக வடிமைத்து உள்ளனர். ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு ஓசை கேற்கிறது. ஏழிசையை இந்த இசைத் தூண் வாயிலாக நாம் கேட்க முடிகிறது. உலக அதிசயங்களில் வைத்து போற்றத் தக்க வேலைப் பாடு இவைகள். ஏனோ இந்திய அரசு கூட முறையான அங்கீகாரத்தை இந்த கோவிலுக்கு தரவில்லை. உயிரோட்டமுள்ள சிலைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை . எடுத்துகாட்டாக பல சிற்பங்களில் உள்ள வில் போன்ற அமைப்புகள் உடைந்துள்ளது. பல சிற்பங்களின் உள்ள வேலைப்பாடுகள் சிதைந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் பலத்தை சிற்பத்தில் காட்டுகிறார்கள். அதனால் சிற்பங்கள் நாளைடைவில் அழிவை சந்திக்கிறது . இது நிறுத்தப்பட வேண்டும். இந்த சிற்பங்கள் வெளிநாட்டில் இருந்து உலக அதிசயமாக போற்றப் பட்டிருக்கும். நேரில் அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய சிற்பங்கள் இவை. 

இதே காலகட்டத்தில் இதே சிற்பப்பள்ளியை சேர்ந்தவர்களால் உருவாக்கப் பட்டது தான் கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில் சிற்பங்கள் . இங்கு மகாபாரத கதாபாத்திரங்களை சிலையாக வடிவமைத்து உள்ளனர். இந்த சிற்பங்களை படம் எடுக்க அனுமதி இல்லை. இங்குள்ள சிற்பங்கள் சிற்பக் கலையின் உச்சம் என்றே கூறலாம். பெண்களை வடிவமைத்த சிற்பிகள் பெண்களின் கூந்தலில் உள்ள ஒவ்வொரு முடியையும் நேர்த்தியாக சிற்பத்தில் காட்டியுள்ளனர். மனிதர்களின் நகம், நரம்பு, தசை என அனைத்தையும் நேரில் பார்ப்பது போல வடிவமைத்து உள்ளனர் தமிழ்ச் தச்சர்கள். இப்படியான சிற்பத் திறன் இப்போது முற்றிலும் அழிந்தே விட்டது என்றும் கூறலாம். தற்போதுள்ள நவீன கருவிகள் இல்லாத காலத்தில் இப்படியான சிற்பங்களை எவ்வாறு தமிழர்கள் செய்தனர் என்பது மிகப்பெரிய கேள்விக் குறி. இந்த கலையை நாம் நிச்சயம் மீட்க வேண்டும். இழந்த தமிழர்களின் வராலாற்று பெருமைகளையும் மீட்க வேண்டும். நாம் கிருஷ்ணாபுரம் வருவதை அறிந்த முகநூல் நண்பர் திருவழகன் சுமார் 30 கிமீ பயணம் செய்து நம்மை பார்த்து பேச அங்கு ஓடோடி வந்தார். அவருடைய ஆர்வத்திற்கு நம் வாழ்த்துகள். நெல்லை செல்லும் மக்கள் இது போன்ற பல வரலாறு, பண்பாடு, இயற்கை சார்ந்த இடங்களுக்கு சுற்றுலா சென்று இன்புறலாம். நமது இளம் தலைமுறைக்கு நமது வரலாற்றை அறியச் செய்யலாம். 


[vuukle-powerbar-top]

Recent Post