Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரண்டை திருவிழாக்கள் மேன்மேலும் பெருக  வேண்டும் ! தமிழர் பண்பாட்டை பறைசாற்ற வேண்டும் ! 

அண்மையில் நடந்து முடிந்த பிரண்டை திருவிழா தமிழர்களின் நடுவே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழர் பண்பாட்டையும், வரலாற்றையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்த இந்த பிரண்டை திருவிழாவில் தமிழர்கள் தற்காலத்தில் மறந்த பல தமிழர் கலைகள், தமிழர் விளையாட்டுகள் , தமிழர் வரலாற்று செய்திகள் மீட்டெடுக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழும், தமிழர் வரலாறும் அழித்து ஒழிக்கப்பட்ட நிலையில் தமிழர்கள் நாம் இழந்த வரலாற்றை, பண்பாட்டை மீட்பது காலத்தின் கட்டாயமாகும். தமிழர்கள் தங்கள் பண்பாட்டு அடையாளத்துடன் ஒன்று கூடக் கூட ஒரு நிகழ்வு தமிழகத்தில் இல்லாமல் செய்து விட்டனர் திராவிட ஆட்சியாளர்கள்.  தமிழர்களுக்கு அறிவும் இல்லை, தமிழில் அறிவியலும் இல்லை என்று திராவிடர்களால் இத்தனை ஆண்டுகள் பொய்ப்பரப்புரை செய்யப்பட்டது. இதனால் தமிழர்கள் தாழ்வு மனப்பான்மையில் தள்ளப்பட்டனர். தமிழர் மெய்யியல் சிதைக்கப்பட்டு ஆரியர்கள் தமிழர்களின் மெய்யியலை தமதாக்கிக் கொள்ள திராவிடம் வழிவகுத்தது. இதனால் தமிழினம் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல. ஆங்கிலம் தான் அறிவு மொழி என்ற பிம்பத்தை திராவிடம் தமிழகத்தில் கட்டவிழ்த்தது. தமிழர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது. தமிழ் பேசவே வெட்கப்படும் ஒரு சமுதாயம் தமிழகத்தில் உருவானது. தமிழர்களுக்கு என்று எந்த பெருமையும் இல்லை என்ற செய்தியே திராவிடர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. 

இப்படியான சூழ்நிலையில் தான் பிரண்டைத் திருவிழா சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திருவிழாவின் மூலமாக தமிழர்களின் பல கலைகள், விளையாட்டுகள், இசைக்கருவிகள், வரலாறு, மருத்துவம், மெய்யியல் என பலவற்றையும் மீட்டெடுத்து மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது இந்த பிரண்டை திருவிழா. நியாயமாக தமிழர்களுக்கு என்று ஒரு அரசு இருந்தால் இத்திருவிழா தமிழக அரசால் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தை அந்நியர்களின் ஆளும் நிலையில் அதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.  எதிர்காலத்தில் தமிழர் அரசு உருவாகும் நிலையில் இது போன்ற தமிழர் விழாக்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் நிச்சயம் நடைபெறும். தமிழகம் மட்டுமில்லாமல் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலும் பிரண்டை திருவிழாக்கள் நடைபெற வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் விருப்பமாக உள்ளது. 

நடந்து முடிந்த பிரண்டை திருவிழா சென்னையில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இத்தகைய தமிழர் திருவிழாக்கள் மேன்மேலும் பெருக வேண்டும், தமிழர்கள் ஒன்றுகூடி தங்கள் ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும். பிரண்டை திருவிழாவை ஏற்பாடு செய்த தமிழர்களுக்கு நம் நன்றி கலந்த பாராட்டுகள் ! 

படங்கள் : தினேஷ் குமார் 


[vuukle-powerbar-top]

Recent Post