Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலகத்தரத்தில் ஒரு தமிழ்ப் பள்ளி மற்றும் வியத்தகு திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ! 

12/06/15 அன்று திருச்சியில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் வெள்ளக்குளம் என்னும் சிற்றூரில் சிறுமலர் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடமும் ஐயன் திருவள்ளுவரின் சிலையும் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ்த் தேசிய போராளிகள், இன உணர்வாளர்கள், ஊர்மக்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 

தமிழ்க் கல்வி வரலாற்றில் இந்த நிகழ்வு பதியப்பட வேண்டிய செய்தியாகும். தமிழர் களம் தலைவர் அண்ணன் அரிமாவளவன் அவர்களின் சீரிய முயற்சியால் இந்த பள்ளி உருவாகி உள்ளது. ஏற்கனவே பள்ளி சிறப்பாக இயங்கி வரும் நிலையில் இப்போது புதிய கட்டிடமும் திறக்கப்பட்டு உள்ளது. இப்பள்ளி சென்னையில் உள்ள தனியார் நடுவண் அரசு பள்ளியை விட சிறப்பான கட்டமைப்பு வசதியை உள்ளடக்கி உள்ளது. தாய்த்தமிழ்ப் பள்ளி என்றாலே அது சிறியதாகவும் , ஓலைக் குடிசையில் இருப்பதாகவும் தான் இருக்கும், கழிவறை , வகுப்பறை வசதிகள் இல்லாமல் தான் இருக்கும் என்ற பிம்பத்தை இப்பள்ளி சுக்குநூறாக உடைத்துள்ளது.  இப்பள்ளியில் உள்ள எல்லா வகுப்பறைகளும் பெரிதாகவும், காற்றோட்டமாகவும் , அதிக வெளிச்சமுள்ளதாகவும் அமைந்துள்ளது. மேலும் வெளி ஊர்களில் இருந்து வந்து இந்த பள்ளியில் பயில விரும்பும் மாணவர்களுக்கு விடுதியும் உள்ளது. கல்விமுறை வேறு எந்த பள்ளியிலும் இல்லாதவாறு மாணவர்களுக்கு புகுத்தப்படுகிறது. ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சியும் அளிக்கப் படுகிறது. தமிழ் ஆங்கிலம் மட்டுமில்லாமல் பல மொழிகளும் இங்கு கற்றுத் தரப்படுகிறது.  தற்போதுள்ள மனப்பாட கல்விமுறை இல்லாமல் செய்முறை கல்வியாக , மாற்று சிந்தனை உள்ள கல்வியாக இங்கு போதிக்கப்படுகிறது. எல்லாவற்றிக்கும் மேலாக தமிழ் மொழி, தமிழ் மண், தமிழர் இனம் சார்ந்த தமிழ்த் தேசிய உணர்வு இங்குள்ள பிள்ளைகளுக்கு ஊட்டப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் பிள்ளைகள் சிறந்த தமிழ்க் குடிமகனாக உருவாக்கி சமூகத்தில் சிறப்பான பணியாற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை. 

இப்பள்ளியின் மற்றுமொரு குறியீடாக ஐயன் திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. 8 அடி பீடத்தில் 8 அடி உயரத்தில் பிரமாண்ட திருவள்ளுவர் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான முயற்சியாகும். தமிழ்ப் பிள்ளைகள் பலரும் திருவள்ளுவருக்கு நாள்தோறும் மரியாதை செய்யும் விதமாக இந்த சிலையை அமைத்துள்ளனர் . பிள்ளைகளின் நெஞ்சில் எப்போதும் வள்ளுவம் வாழ வேண்டும் என்றால் ஒவ்வொரு பள்ளிகளிலும் திருவள்ளுவருக்கு இப்படியான சிலை எழுப்பப்பட வேண்டும் என்பதே நம் அவாவாகும். 

இப்பள்ளியை உருவாக்கிய அண்ணன் அரிமாவிற்கு நம் வாழ்த்துகளை பகிர்ந்தோம். இப்படியான பள்ளிகள் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்தார் அண்ணன் அரிமா . சென்னையிலும் இத்தகைய பள்ளி உருவாக வேண்டும் என்று நம்முடைய விருப்பத்தை தெரிவித்தோம். பொருள் வசதியுள்ள தமிழர்கள் நினைத்தால் நிச்சயம் இது சாத்தியம் தான் . குறைந்தபட்சம் நிலத்தை பள்ளிக்கு கொடுத்தால் கூட போதுமானது. சிறுமலை பள்ளியை போல உலகத் தரத்தில் ஒரு தமிழ்ப் பள்ளியை நாம் உருவாக்கலாம் என்று கூறினார் அண்ணன் அரிமா. இதற்கான முயற்சியில் நாம் அனைவரும் ஈடுபடுவோம். 

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய அன்பர்களான செந்தில் மள்ளர், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூலை எழுதி தமிழர்களை தட்டி எழுப்பிய அறிவர் குணா அவர்களையும், மலேசியாவில் இருந்து வந்திருந்த தமிழ் ஆர்வலர் கலைமுத்து அவர்களையும் சந்தித்து உரையாடி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது. 






 
[vuukle-powerbar-top]

Recent Post