Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழின ஓர்மைக்கு உறுதியேற்று நிறைவுபெற்றது முதல் தமிழ் தமிழர் வாசகர் வட்டம் சந்திப்பு !

ஞாயிறு 7-06-2015 அன்று முதல் தமிழ் தமிழர் வாசகர் வட்டம் சந்திப்பு சென்னை முகப்பேரில் நடைபெற்றது. தமிழர்களுக்கான வாசகர் வட்டம் கல்லூரிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் உருவாக்கப்பட வேண்டும், தமிழர்கள் அனைவரும் வேற்றின மக்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வாசகர் வட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. குறிப்பாக திராவிட கருத்தியல் எந்த அளவிற்கு தமிழர்களை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒடுக்கி வருகிறது என்பதை ஆய்வு செய்வதற்கு இந்த கூட்டம் பெரிதளவில் பயன்பட்டது. தமிழர்களின் இன ஒற்றுமையை எவ்வாறு ஆரிய திராவிடக் கருத்தியல் சிதைத்து உள்ளது என்பதை பற்றியான விழிப்புணர்வு நிகழ்வாகவே இந்த சந்திப்பு அமைந்தது.  முகநூல் செய்தியை பார்த்து பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த் தேசத்தை மையமாக வைத்து தமிழ் மொழி, தமிழர் வரலாறு சார்ந்த வினா விடை போட்டி வாசகர்களிடையே நடைபெற்றது. பலரும் ஆர்வமுடன் பதிலளித்தனர். விடை தெரியாத கேள்விகளுக்கு விடையறிய ஆர்வம் காட்டினர். இதன் பின்னர் சிறு தலைப்பின் கீழ் அனைவருக்கும் இரண்டு நிமிடங்கள் பேசும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் , கல்லணை, கண்ணகி, மீத்தேன் திட்டம், மாநில தன்னாட்சி, அணு உலை ஆபத்து , தமிழகத்தில் தமிழர் ஆட்சி போன்ற தலைப்புகளின் கீழ் பலரும் சிறந்த கருத்துக்களை முன்வைத்தனர் . இந்த நிகழ்வு வந்திருந்த நபர்களின் அறிவுத் திறனை வெளிப்படுத்வதாக அமைந்தது.

இதன் பின்னர், பெரிய தலைப்புகளின் கீழ் ஆழமாக ஆய்வாளர்கள் ஆழமாக விவாதிக்கத் தொடங்கினர். தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி என்ற தலைப்பில் திரு.அதியமான் அவர்கள் பேசினார். தமிழர் விரோத திராவிட அரசியலை இம்மண்ணில் இருந்து அப்புறப்படுத்தாமல் தமிழர்களுக்கு விடியல் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார் அதியமான்.

அடுத்ததாக திராவிடர்களின் போலியான சாதி ஒழிப்பு நாடகத்தை பற்றி புட்டு புட்டு வைத்தார் தமிழர் உலகத்தின் உறுப்பினர் பாரிசாலன். ஏன் திராவிடர்கள் தமிழர்களின் சாதியை ஒழிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் இவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது, தமிழ்ச் சாதிகளின் நடுவே எப்படியெல்லாம் திராவிடர்கள் சண்டை மூட்டி குளிர் காய்கிறார்கள், சாதி அரசியலை இவர்கள் எவ்வாறு முன்னெடுத்து குழப்பம் விளைவிக்கிறார்கள் குறித்து பாரிசாலன் சிறப்பாக பேசினார். திராவிடர்கள் எந்த காலத்திலும் சாதியை ஒழிக்க மாட்டார்கள் என்றும் சாதியை வைத்துத் தான் அவர்கள் தொடர்ந்து இந்த மண்ணில் அரசியல் செய்வார்கள் என்றும் பேசினார்.

அடுத்ததாக பேசிய சீதையின் மைந்தன் , தமிழக அரசியலில் தெலுங்கர்களை தமிழர்களிடம் இருந்து பிரித்து எடுக்கலாம் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க முடியாது என்றும், தமிழகத்தில் எவ்வாறு தெலுங்கர்கள் திராவிடம் என்ற போர்வையில் அரசியல் செய்கிறார்கள் என்பதை விளக்கினார் . தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா , இலங்கை நாடுகளில் தெலுங்கர்கள் எப்படியான ஆதிக்கத்தை செலுத்துகிறார்கள் என்பதை வரலாற்று சான்றுகளுடன் விளக்கினார்.

அடுத்ததாக பறையர்களின் எழுச்சியே தமிழ்த் தேசியத்தின் எழுச்சி எந்த தலைப்பில் சுச பார்ப்பனர் பேசினார். ஒடுக்கப்பட்ட சமூகம் என்று கூறப்படும் பறையர் சமூகத்தை இனி தலித் என்று சொல்வதை நிறுத்தவேண்டும் என்றும், பறையர்களின் பங்களிப்பு இல்லாமல் தமிழ்த் தேசியம் சாத்தியம் இல்லை என்றும் பேசினார். வரும் காலத்தில் பறையர் சமூகத்தின் பாதுகாப்பை அனைத்து தமிழ்ச் சாதிகளும் உறுதி செய்தால் தெலுங்கர்கள் இங்கு அரசியல் செய்வதை நிச்சயம் தடுக்கலாம் என்றும் திராவிடம் அப்போது இல்லாமல் போகும் என்பதை விளக்கினார்.

இறுதியாக, தமிழினம் ஓர்மை அடையவேண்டும். தமிழ் சமூகத்தில் கீழ்சாதி மேல்சாதி என்ற வேறுபாடு இனியும் இருக்கக் கூடாது , ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு அனைத்து தமிழர்களும் ஒற்றுமையுடன் ஆதரவளித்து அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற அனைத்து வழிகளிலும் நாம் பாடுபட வேண்டும் என்றும் உறுதி ஏற்கப்பட்டது. தமிழ் சமூகங்கள் ஒன்றிணைந்தால் நம்மை அடக்கி ஆளும் திராவிடக் கருத்தியல் இம்மண்ணில் இருந்தே விரட்டி அடிக்கப்படும் என்ற செய்தியை தமிழ் தமிழர் வாசகர் வட்டம் தெளிவாக பறைசாற்றியது. ஒவ்வொரு மாதமும் தமிழ் தமிழர் வாசகர் வட்டம் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வந்திருந்த அனைவரும் முன்வைத்தனர்.











[vuukle-powerbar-top]

Recent Post