Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலக மக்கள் தொகை 700 கோடி. ஆனால் நாடுகளின் எண்ணிக்கை 196. இது பொருத்தமான எண்ணிக்கை தானா ?

தற்போதுள்ள உலக மக்கள் தொகை சுமார் 700 கோடியாகும். உலகில் உள்ள நாடுகளின் எண்ணிக்கையோ வெறும் 196 தான். 60 விழுக்காடுகளுக்கு மேல் மக்கள் தொகை ஆசிய கண்டத்தில் தான் உள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாக சீனா, இந்தியா , ஐக்கிய அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகள் உள்ளன. ஆசிய நாடுகள் தான் அதி வேகமாக மக்கள் தொகையில் வளர்கின்றன. 2050 இல் உலக மக்கள் 900 கோடியை தாண்ட உள்ளது. இருப்பினும் இந்த காலகட்டத்தில் ஒரு சில நாடுகள் மட்டுமே புதியதாக உருவாகும் எனத் தெரிகிறது.

700 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் வெறும் 196 நாடுகள், அதாவது அரசுகள் தான் உள்ளன என்பது எந்த விதத்திலும் பொருந்திப் போவதாக தெரியவில்லை. காரணம் உலகில் உள்ள பெரிய நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில், பாகிஸ்தான், அமெரிக்கா  போன்ற நாடுகள் பல தேசிய இனங்களை உள்ளடிக்கி உள்ளன. ஒரு சில வல்லாதிக்க சர்வாதிகார அரசுகளால் பல தேசிய இனங்கள் இந்த நாடுகளில் அடிமைப்பட்டு சிறைப்பட்டு  இருக்க வேண்டி உள்ளது.

எடுத்துகாட்டாக இந்தியாவில் பல மொழி வழி, மரபு வழி தேசிய இனங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த தேசிய இனங்களை இந்தி மக்களே ஆளுமை செலுத்துகிறார்கள். இதனால் இந்தி அல்லாத தேசிய இன மக்களின் மொழி உரிமை , பண்பாட்டு உரிமை, வரலாற்று உரிமை, இயற்கை வளங்களின் மீதான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய அநீதியாகும். இதே போலத் தான் சீனாவிலும், பாகிஸ்தானிலும் பல தேசிய இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அந்த தேசிய இனங்கள் ஒரு அரசின் கீழ் அடிமையாக இருக்கின்றன. இலங்கையில் சிங்கள அரசின் கீழ் தமிழ்த் தேசிய இனம் அடிமைப்பட்டு இருக்கிறது. இவ்வாறாக பல நாடுகளில் பல தேசிய இனங்கள் அடிமைப்பட்டு கிடக்கின்றன.

உண்மையான மக்களாட்சி இவ்வுலகில் மலர வேண்டுமெனில் , ஒவ்வொரு மொழிவழி மரபுவழி தேசிய இனத்திற்கும் ஒரு இறையாண்மையுள்ள அரசு தேவைப்படுகிறது . அது கிடைத்தால் மட்டுமே உலக மக்கள் நலமுடன் வளமுடன் ஒற்றுமையாக வாழ முடியும். இந்தியாவில் இப்போது நடுவண் அரசு எல்லா அதிகாரமும் பெற்று ஒற்றை சர்வாதிகார ஆட்சி செய்து வருகிறது. இத்தகைய மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். இங்குள்ள தேசிய இனங்கள் தங்களுக்கான தன்னாட்சி அதிகாரத்தை பெறுதல் அவசியமாகும். முதல் கட்டமாக மாநில தன்னாட்சியும், பிறகு சுய நிர்ணயம் பெறுவதும் , அதன் பிறகு தேவைப்பட்டால் தனிநாடுகளாக இந்த தேசங்கள் உருவாகும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இது தான் வளரும் மக்கள் தொகைக்கும், நிலையான நேர்மையான நிர்வாகத் திறன் கொண்ட அரசுகளாக செயல்படவும்  ஈடுகொடுக்கும்.

பல தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடுகளின் மக்கள் தொகை வளர்ந்து கொண்டே இருக்கும் போது அதற்கேற்றால் போல தேசிய இனங்களின் அதிகாரங்களும் வளர வேண்டும். புதிய அரசுகளும், புதிய நாடுகளும் உருவாகுவதை இனியும் ஐ.நா மன்றமும் , சர்வாதிகார நாடுகளும் தடுக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. வல்லாதிக்க நாடுகள் தேசிய இன மக்களின் உரிமைகளை , அடையாளங்களை மதிக்கக்கற்றுக் கொள்வதின் மூலமாகவே நாகரீகமான உலகத்தை உருவாக்கிட முடியும். உலக மக்கள் அனைவரும் தத்தமது இனத்தின் விடுதலையை அவர்கள் வாழும் காலத்திலேயே அனுபவித்து வாழ்தல் வேண்டும். இதற்கு அனைவரும் உறுதுணை புரிய வேண்டும்.

பின் குறிப்பு : படத்தில் இன அடிப்படையில்  உருவாக வேண்டிய பல நாடுகள் தோராயமாக காட்டப்பட்டுள்ளன. இதற்கும் மேலான நாடுகள் உருவாக வேண்டிய அவசியம் இருக்கலாம். இந்த தேசிய இனங்கள் கேட்பது பிரிவினையல்ல, அவர்களின் நியாயமான வரலாற்று உரிமையை தான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.








  
[vuukle-powerbar-top]

Recent Post