Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர்களின் பெருமை ! கரிகாற்பெருவளத்தான் கட்டிய ஈடு இணையில்லா கல்லணை ! இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம்.

திருச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் கல்லணை. தமிழர்களின் அறிவாற்றல் மிகுந்த வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்குகிறது இந்த கல்லணை. நம் அறிய வேண்டிய சில செய்திகளை விக்கிபீடியா இணையதளத்தில் ஏற்கனவே தமிழர்கள் பதிவிட்டு உள்ளனர். அதையும் கொஞ்சம் பார்ப்போம்.

// பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன காரியம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .

நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.//

இப்படியான பெருமைமிக்க கல்லணையை ஒவ்வொரு தமிழரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டும். நான் பல வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள சிறப்பு மிக்க கட்டிடங்களை பார்வையிட்டு உள்ளேன் . அமெரிக்காவின் சிறப்பு வாய்ந்த சுதந்திர தேவியின் சிலையையும் பார்வையிட்டு உள்ளேன் . ஆனால் அங்கெல்லாம் கிடைக்காத ஒரு பெருமைமிக்க உணர்வு கரிகாலன் கட்டிய கல்லணையை காணும் போது எனக்கு கிடைத்தது .  தமிழர் என்ற பெருமிதமும் இங்கு தோன்றிற்று . தமிழராக தங்களை உணர்ந்தவர்கள் இப்படியான வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு செல்லும் போது நமது முன்னோர்களின் அறிவுத்திறனை கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

'நடந்தாய் வாழி காவேரி' என்ற வரிகளை நினைத்து இந்த காவேரி ஆற்றில் மூழ்கிக் குளித்த போது நம் தமிழ் மொழியை, தமிழ் மண்ணை , தமிழ் இனத்தை இன்று போல் எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு தான் மேலோங்கியது.

வாழ்க கரிகாலனின் புகழ் ! வாழ்க காவிரித் தாயின் புகழ் !  வாழ்க நம் தமிழரின் வான்புகழ் ! 
[vuukle-powerbar-top]

Recent Post