Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சீனாவில் நாய்கள் படுகொலை, நேபாளில் மாடுகள் படுகொலை, டென்மார்க்கில் டால்பின் மீன்கள் படுகொலை ! மனிதர்கள் எங்கே செல்கிறார்கள் ?   

உலகில் ஒருபுறம் மனிதர்கள் அரச பயங்கரவாதத்தால் பல நாடுகளில் படுகொலை செய்யப்படுகிறார்கள். மற்றொருபுறம் சத்தமில்லாமல் திருவிழா, கேளிக்கை, கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் விலங்குகள்  படுகொலை செய்யப்படுகின்றன. மனிதர்கள் கொலை செய்யப்பட்டால் அவர்களுக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களும் கொலை செய்தவர்களுக்கு தண்டனைகளும் சிறைச்சாலைகளும் உள்ளன. ஆனால் விலங்குகளை கொலை செய்தால் அதற்கு எந்த தண்டனையும் இல்லை என்ற காரணத்தால் அப்பாவி விலங்குகள் ஈவு இரக்கமின்றி வேட்டையாடப்படுகிறது. அதுவும் திருவிழா என்ற பெயரிலும், கடவுள் நம்பிக்கை என்ற பெயரிலும் கொலை செய்யப் படுகின்றன. 

 சீனாவில் யூலின் என்ற ஊரில் 10,000 க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை செய்யப்படும் நாய்க்கொலை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இங்கு வீட்டில் வளர்க்கப்படும் செல்லமான விலங்கான நாய்கள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, கொலைக் களத்திற்கு கொண்டு செல்ல தயாராகிறது . இந்த நாய்களை உயிருடன் கொதிக்கும் நீரில் போட்டு கொலை செய்து பின்னர் இந்த நாய்களின் இறைச்சியை சீன மக்களில் ஒரு சாரார் உண்கிறார்கள். இதன் மூலம் தங்களுடைய சிக்கல் எல்லாம் தீர்ந்து விடும் என்று நம்புகிறார்கள் சில சீனர்கள். இந்த ஆண்டு இந்த நாய்கள் படுகொலைக்கு எல்லா தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உலகில் உள்ள பிரபலங்கள் பலரும் இந்த நாய்கள் படுகொலையை எதிர்த்து வருகின்றனர் . இருப்பினும் இந்த திருவிழாவை சீன அரசு தடை செய்யுமா என்பது கேள்விக் குறியே. 

இதே போலத் தான் நேபால் நாட்டிலும் இந்து மதத்தின் திருவிழா என்ற பெயரில் பல இலட்சம் மாடுகள் ஒரே இடத்தில் கொல்லப்படுகின்றன. மாடுகள் மட்டுமின்றி அனைத்து வகையான வீட்டு விலங்குகளும் இந்த திருவிழாவில் கொத்து கொத்தாக திறந்த வெளியில் கொல்லப்படுகின்றன. இந்த ஆண்டு தான் நேபாளில் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு உலக மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மிகவும் முன்னேறிய நாடான டென்மார்க் நாட்டில் மனித நாகரீகமே சிரிக்கும் வகையில் கேளிக்கைக்காக  ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் டால்பின் இன மீன்கள் கொல்லப்படுகின்றன. இதை டென்மார்க் மக்கள் பெருமையாக கொண்டாடி வருகிறார்கள். மீன் இனத்திலேயே மிகவும் அறிவுடைய, அன்புடைய மீன் வகை இந்த டால்பின் மீன் வகை தான். மனிதர்களுடன் நெருக்கமாக பழகக் கூடியவை. இப்படியான டால்பின் மீன்களை இரக்கமில்லாமல் கொலை செய்கிறார்கள் டென்மார்க் மக்கள். இதற்கும் பல விலங்கின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து தான் வருகிறார்கள் . எனினும் இந்த திருவிழா இன்றும் நின்றபாடில்லை. 

மனிதர்கள் தான் இயற்கை உணவுச் சங்கிலியில் பாதுகாப்பாக கடைசி இடத்தில் இருக்கிறார்கள். அறிவில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்.  எல்லா உயிர்களையும் பாதுகாக்கும் பொறுப்பும் மனிதர்களுக்கு தான் இருக்கிறது. மனிதனிடமே இந்த பொறுப்பை இயற்கை ஒப்படைத்து உள்ளது. இருப்பினும் மனிதன் தன்னுடைய அற்ப மகிழ்ச்சிக்காக அப்பாவி உயிரினங்களை கேளிக்கை என்ற பெயரிலும், கடவுள் நம்பிக்கை என்ற பெயரிலும் , மூட நம்பிக்கையாலும் கொலை செய்து வருகிறான். இது இயற்கைக்கு முற்றிலும் விரோதமானது. 

" அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் 
பிறவினை எல்லாந் தரும்." - 321

உரை : பிற உயிர்களை  கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும். 

மேற்கண்ட திருக்குறளுக்கு ஏற்ப கூடியமட்டும் நாம் மனிதர்களை நம்பி வாழும் உயிர்களுக்கு தீமை செய்யாமல் இருப்போம். நம்முடைய மகிழ்ச்சிக்காக பிற உயிர்களை கொல்ல வேண்டாம். சீனா, நேபால், டென்மார்க் மட்டுமில்லாமல் உலகில் எங்கும் இப்படியான விலங்கின படுகொலைக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம். இயற்கையை நேசிப்போம், இரக்கத்தை சுவாசிப்போம் , மனிதத்தை போற்றுவோம். 








[vuukle-powerbar-top]

Recent Post