Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சாதிய ஏற்றத் தாழ்வு என்ற பெயரால் நடக்கும் படுகொலையை தமிழர்கள் அனைவரும் கண்டிப்போம் ! 

தமிழர்களுள் எந்த சாதியையும் உயர்ந்ததும் அல்ல, எந்த சாதியையும் தாழ்ந்ததும் அல்ல. தமிழ்ச் சாதிகள் அனைத்தும் சமமே என்றே கருத்தை ஆதி காலம் தொட்டே நம் முன்னோர்கள் முன்மொழிந்து வந்துள்ளனர். சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்று ஒளவையும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நம் வள்ளுவனும் மனிதர்களும் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்று தெளிவுபட உரைத்துள்ளனர். எனினும் ஆரியம் தமிழ்ச் சாதிகளிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்க, அதை திராவிடம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி சாதி இறுக்கத்தை உருவாக்கி தமிழர்கள் ஒன்றிணைய விடாமல் பார்த்துக் கொண்டது. இதன் விளைவாகத் தான் தமிழ் சாதிகள் ஒன்றோடு ஒன்று மோதி தங்களுக்குள் அடித்து சாகிறது. இப்போது நடந்துள்ள பறையர் இனக்குழுவை சேர்ந்த ஒருவரை கவுண்டர் இனக்குழுவை சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ளனர் என்ற செய்தியும் தமிழர்களின் சாதி குறித்த அறியாமையை தான் காட்டுகிறது. 

தமிழினத்தின் மூத்த இனக்குழுவான பறையர் இனக்குழு தான் தமிழர்களின் முன்னோர்கள். தமிழர் வரலாற்றை மீட்பவர்கள். தமிழ் மறையர்களும் இவர்களே ஆவர்.  இவர்களை தாழ்ந்தவர்கள் என்று கூறி இவர்களை ஒதுக்கி வைக்கும் போக்கை மற்ற தமிழ் இனக்குழு செய்வதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஆரிய திராவிட கருத்தியலாளர்கள்  தான் . திராவிடக் கோட்பாட்டில் சிக்குண்ட தமிழகம் கடந்த நூறு ஆண்டுகளாக திராவிடத்தின் தாக்கத்தால் தங்களை தமிழர்கள் என்று கூட உணர்ந்து கொள்ளவில்லை. 

தமிழர் வரலாற்றையும் தமிழர் ஒற்றுமையையும் திராவிட ஆட்சியாளர்கள் தமிழ் பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்கவில்லை. வரலாறு அறிந்த இனம் வலிமைபெற்று எக்காலத்திலும் ஒற்றுமையுடன் விளங்கும். ஆனால் அப்படியான சூழலே தமிழ் சமூகத்தில் உருவாகக் கூடாது என்று ஆரிய திராவிட மதக் கோட்பாட்டாளர்கள்  உறுதியாக விரும்புகிறார்கள். தமிழனை இன்னொரு தமிழன் தாக்கினால் திராவிடர்கள் ஒட்டு மொத்த தமிழர்களையும் இழிவு செய்தே பழகி விட்டனர். தமிழனை ஏன் இன்னொரு தமிழன் முதலில் தாக்க வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தாது தமிழ்ச் சாதிகளுக்குள் இணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எல்லா தமிழ்ச் சாதிகளும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் தான் என்றும், ஒரு சாதியில் இருந்து இன்னொரு சாதியினர் பெண் எடுத்தாலோ அல்லது பெண் கொடுத்தாலோ அது கலப்பு திருமணம் ஆகாது என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். தமிழ்ச் சாதிகள் தங்களுக்குள் எந்த சாதியை சேர்ந்தவர்களையும் திருமணம் செய்தாலும் தமிழினத்திற்கு எந்த இழப்பும் இல்லை.  

இந்த புரிதலை விரைவில் நாம் எல்லா தமிழ்ச் சாதிகளுக்கும் ஏற்படுத்துவோம் . சாதியின் பெயரால் நடக்கும் இப்படியான பச்சைப் படுகொலை என்பது  அநீதியானது, நியாயமற்றது, அறமற்றது, தமிழர் பண்பாட்டிற்கு புறம்பானது. சாதிகளின் பெயரால் நடக்கும் மோதல்களை நாம் இனியும் வேடிக்கை பார்க்காமல் தமிழர்கள் நாம் நமது வரலாற்றை பின்னோக்கி பார்த்து அனைத்து சாதிகளும் சமமே என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். தமிழ்ச் சாதிகளுக்குள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற ஆரிய திராவிடர் உருவாக்கிய  பிரிவினையை கருத்தியலை உடைத்தெறிவோம். சாதிய ஏற்றத் தாழ்வுகளை தமிழர்கள் அனைவரும் உடனே களைவோம். தமிழர்களாக ஒன்று பட்டு நிற்போம். கொலை செய்யும் அளவிற்கு துணிந்த ஒரு சில சுயசாதி வெறி பிடித்தவர்களை கண்டிப்போம். இப்படியான சுயசாதி வெறியர்களை அனைத்து தமிழ்ச் சாதிகளும் கண்டிக்க முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறோம். 




[vuukle-powerbar-top]

Recent Post