Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முகநூலில் இருந்து தமிழ் நடிகர் சிவக்குமார் வெளியேறுவதாக அறிவித்துள்ளது தமிழர்களுக்கு பின்னடைவே ! இது ஒரு வருந்தத்தக்க நிகழ்வாகும் !  

தமிழில் தமிழர்களை பற்றி பதிவிடும் ஒரே  தமிழ் நடிகர் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரைப்பட துறையில் தமிழர் அல்லாதவர்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தமிழ் நடிகரான சிவகுமார்  முகநூல் வாயிலாக பல வரலாற்று செய்திகளையும், தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் தமிழர்களுக்கு பகிர்ந்து வந்துள்ளார். தன்னுடைய நடிப்புக் கலை மட்டுமல்லாமல் தான் கற்றறிந்த பல கலைகளை பற்றி கூறி தமிழர்களுக்கு நம்பிக்கையும்  ஊக்குவிப்பையும் வழங்கி வந்தார். தன்னுடைய வாழ்நாள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பல தமிழர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் சிவக்குமார் விளங்கி வந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தமிழில் பதிவிடுவதே கேவலம் என்று நினைக்கும் திரையுலக பிரபலங்கள் நடுவே சிவக்குமார் அழகான தமிழில் பல நல்ல செய்திகளை பகிர்ந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் . தற்காலத்தில் உள்ள தமிழ் நடிகர்கள் தமிழர் வரலாறு கூட அறியாமல் அவ்வப்போது 'ஜெய் இந்து' என்று சொல்லி பல்லாயிரம் விருப்பங்களை முகநூலில் அள்ளிக் குவிக்கும் காலத்தில் , சிவக்குமார் தமிழர்கள் பற்றியும் தமிழர்  வரலாற்றை பற்றியும் எழுதி வந்தார். சிவக்குமார் அவர்களின் எழுத்துக்களும் கருத்துக்களும் தமிழர்களுக்கு பலம் சேர்ப்பதாகவே அமைந்தது. 

இந்நிலையில் சிவக்குமார் அவர்கள் எழுதிய தீரன் சின்னமலை குறித்த வரலாற்று கட்டுரையின் பின்னூட்டத்தில்  தேவையே இல்லாமல் சிலர் சாதியை குறித்து பதிவிட்டு சிவக்குமார் அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை தந்துள்ளனர். பலர் தனி மனித தாக்குதலும், குடும்பத்தை இழுத்து தாக்கியும் எழுதியுள்ளார். இப்படியான பின்னூட்டங்களை தமிழ் சமூகம் கட்டாயம் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் பல கருத்தியல் அடிப்படையில் பிரிந்து இருக்கும் தமிழர்கள் எந்த பதிவிலும் சென்று எதிர்க்கருத்து, தாக்குதல் கருத்துக்களை வைக்க தவறுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை. நல்ல உணர்வாளர்களை நாம் மதிக்கத் தவறுகிறோம் என்பதையே இந்நிகழ்வு நமக்கு காட்டுகிறது. தமிழர்களை இழித்தும் பழித்தும் பேசியுள்ள தமிழர் அல்லாதவர்களை தூக்கி சுமக்கும் தமிழர்கள், நேர்மையான தமிழர்கள் சார்பில் பேசக்கூடிய தமிழர்கள் மீது வன்மத்தை காட்டுகிறது. இது எப்படியான தவறான புரிதல்  என்பதை தமிழர்கள் இனியாவது உணர்தல் வேண்டும். 

தமிழில் தமிழர்களுக்காக பதிவிடும் ஒரு சில தமிழ் நடிகர்களையும் தமிழ் சமூகம் இழந்து விட்டால் நமக்கான பலத்தை நாமே இழக்கிறோம் என்பதை நாம் உணர்தல் வேண்டும். முகநூலில் பலமுனை தாக்குதல். அவதூறு பரப்புரை, வதந்திகள் என பலவும் வரத் தான் செய்யும் என்பதையும் முகநூல் பதிவர்கள் உணர்தல் வேண்டும். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் அவர்கள் தனக்கு நடந்த கசப்பான நிகழ்வை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து முகநூலில் தனது பங்களிப்பை வழங்கக வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 





[vuukle-powerbar-top]

Recent Post