Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதிதாக தொடங்கப்பட்ட சென்னை பெருநகர தொடர்வண்டியில் (சென்னை மெட்ரோ) நேரடி ஆய்வு !

இன்று நாமும் தோழர் அதியமான் அவர்களும் சென்னை பெருநகர தொடர்வண்டி நிலையத்திலும், தொடர்வண்டியில் பயணித்தும் ஒரு ஆய்வை மேற்கொண்டோம். சென்னை கோயம்பேடு நிறுத்தத்தில் பயணசீட்டை பெற்றுக் கொண்டு வடபழனி வரை சென்றோம். தொடர்வண்டி நிலையம் எங்கும் தகவல் பலகைகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் உள்ளது. மக்களுக்கு சேவை வழங்க ஆங்காங்கே தமிழர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழ் மொழியில் அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. தமிழ் தெரியாதவர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறார்கள் ஊழியர்கள். பயணசீட்டு வழங்கும் தானியங்கி இயந்திரத்தில் தமிழ் மொழியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்வண்டி பயணம் எளிமையாக இருந்தது. தொடர்வண்டியின் உள்ளே முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியாக ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. குளிர் சாதனம் நன்றாக இயங்குகிறது. தொடர்வண்டி நிறுத்தம் வரும்போது தமிழில் பதிவு செய்யப்பட்ட தானியங்கி அறிவிப்பு வருகிறது. புறநகர் தொடர்வண்டியில் இந்தியில் முதலில் அறிவிப்பு வருகிறது . அது போல அல்லாமல் தமிழில் மொழியில் மின்னணு பலகையில் அறிவிப்பு வருகிறது. 

தொடர்வண்டி நிலையங்களில் கழிவறை ஆண்கள் பெண்கள் மாற்றுத் திறனாளிகளுக்கும் பயன்படும் வகையில் உள்ளது. கழிவறை மிகவும் சுத்தமாக தற்போது வைத்துள்ளனர். கழிவறையில் கைகள் கழுவ திரவியமும் உள்ளது.  மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் மின்தூக்கி வசதி உள்ளது. பெரிய சுமையுடன் கூடிய பைகள் மற்றும் பெட்டிகளுக்கு அனுமதி இல்லை. தொடர்வண்டி நிலையங்களும், தொடர்வண்டியும் உலகத்தரத்தில் உள்ளன. 

அனைத்து அறிவிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது பாராட்டுக்குரியது. இந்தித் திணிப்பை பெரிதளவில் தடுத்து விட்டார்கள் என்றாலும் தொடர்வண்டி நிறுத்தங்களில் உள்ள நிறுத்தப் பெயர் பலகையில் இந்தியை திணித்து விட்டார்கள். சென்னை பெருநகர தொடர்வண்டி நிறுவன இயக்குனர் ஒரு இந்திக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் எந்த வகையிலும் இந்தியை திணித்து விடுவார்கள் என்பது நாம் அறிந்த விடயம் தான். ஆனால் வடநாட்டில் எங்குமே நாம் தமிழில் அறிவிப்பு பலகைகளை காணமுடியாது. தமிழக அரசு கண்டிப்புடன் இருந்திருந்தால் இந்த தொடர்வண்டி நிறுத்தங்களில் இந்தித் திணிப்பை நீக்கி இருக்கலாம். இதை முறையே தமிழ் வளர்ச்சித் துறை கவனிக்கவில்லை என்பது நம் ஆய்வில் தெரிகிறது. 

மேலும் வடபழனியில் இறங்கி திரும்பி வர பயணசீட்டு எடுக்க முயன்றோம். வடபழனி நிறுத்தத்தில் பயணம் செய்வதற்கான நாணயங்கள் இருப்பில் இல்லை என்று தெரிவித்து விட்டனர். இது மிகப்பெரிய செயல்பாட்டுக் குறைபாடு. பயணசீட்டு வழங்குபவர் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. பயண நாணயங்களை இயந்திரத்தில் தான் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டனர். இயந்திரத்தில் நாணயங்களை பெற சரியான சில்லறை வேண்டும் என்று சொல்லிவிட்டனர். பிறகு நூறு ரூபாய் தாள் போட்டு மூன்று நபருக்கு பயண நாணயத்தை பெற்றோம் . பல பயணிகளும் இந்தக் நிறுவாகக் குறைபாட்டால் அவதிக்கு உள்ளானார்கள். 

இதை தவிர்த்து, தொடர்வண்டி கட்டணம் அதிமாக உள்ளது என்பதே பலரின் கருத்தாக இருந்தது. பயணக் கட்டணத்தை குறைத்தால் பலரும் பயனடைவார்கள். உள்ளே இன்னும் கடைகள் வரவில்லை. விரைவில் கடைகளும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் ஒரு பயணசீட்டை எடுத்தால் எங்கு வேண்டுமானலும் ஏறலாம் இறங்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.  இப்படியான வசதி சென்னை பெருநகர தொடர்வண்டியில் இல்லை என்பது ஒரு குறைப்பாடு. இந்த வசதியும் பயணிகளுக்கு  செய்து தரவேண்டும். 

நிறுத்தங்களில் உள்ள இந்தித் திணிப்பை முற்றிலும் அகற்ற வேண்டும். மேலும் எல்லா பெட்டிகளிலும் திருக்குறள் வர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர் பண்பாட்டு நடுவம் வைத்திருந்தது. இக்கோரிக்கையை அரசும் அப்போது ஏற்றது. இருப்பினும் தற்போது தொடர்வண்டியில் எங்கும் திருக்குறள் காணப்படவில்லை. விரைவில் இதை செய்வார்கள் என்று நம்புகிறோம். இது குறித்து நிறுவன இயக்குனரை நேரில் சந்தித்து  மனுவும் கொடுக்க உள்ளோம். தரமான பெருநகர தொடர்வண்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்பதில் ஐயமில்லை. மக்களும் இந்த தொடர்வண்டியில் அசுத்தம் செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.  [vuukle-powerbar-top]

Recent Post