Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலகின் மிகவும் புகழ்பெற்ற  பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது.  ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் தொடங்கப்படவுள்ளது. இந்த முன்னெடுப்பை அமெரிக்கா வாழ் தமிழர்களும் தமிழ் சங்கமும் இணைந்து செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட்  பல்கலையில் தமிழ்த்துறை உருவாகுவது உலகத் தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளது. அழியும் மொழிகளின் பட்டியிலில் இருந்து தமிழ் மொழியை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். தமிழக அரசின் துணையின்றி உலகத் தமிழர்கள் தமிழ் மொழியை வாழ வைக்க அரும்பாடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தை ஆண்ட ஆளும் கட்சிகள் எவையும் தமிழர் கட்சிகளாக இல்லாத காரணத்தால் கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் தமிழும் அழிந்தது தமிழனும் அழிந்தான். திராவிட அரசுகள் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்க தமிழ் மொழியை இந்திய ஆட்சி மொழியாக்க பெரு முயற்சி மேற்கொள்ளாமல் ஆங்கிலத்தையும் இந்தியையும் தமிழகத்தில் படு வேகமாக வளர்த்தது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில்  உள்ள பல்கலையில் தமிழுக்கான இருக்கையை கூட தமிழக அரசு பெறவில்லை. வெளிமாநிலங்களின் வாழும் தமிழர்களிடையே தமிழ் மொழியை கொண்டு சேர்க்கவில்லை. வெளிநாடுகளில் தமிழ் மொழி குறித்த ஆய்வை செய்ய முன்வரவில்லை . தமிழகத்தில் இருக்கும் தமிழ் வழிக் கல்விக்கும் மூடுவிழா கண்டது திராவிட அரசு . இப்படி படிப்படியாக தமிழை தமிழகத்தில் இருந்து அகற்ற பல முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் நிலையில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் தமிழுக்கென்று ஒரு துறையை அங்குள்ள பல்கலையில் ஏற்பாடு செய்துள்ளது பாராட்டுக்குரியது.

இதை பார்த்தாவது தமிழக அரசு தமிழ் மொழியை உலகமெங்கும் கொண்டு செல்லவும் , தமிழகத்தில் தமிழுக்கு முதன்மை நிலையை உருவாக்கவும் முன்வர வேண்டும். தமிழக அரசுக்கு தமிழர்கள் நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து தமிழ் மொழியை பாதுகாப்போம். வாழ்க தமிழ் !



[vuukle-powerbar-top]

Recent Post