Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஏரிகளை, நீர் நிலைகளை பாதுகாப்பது தான் அரசின் கடமை, இவற்றை ஆக்கிரமிப்பது அல்ல !

இயற்கையை பாதுகாத்தல் என்பது தமிழ்த் தேசியத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். ஒரு தேசத்திற்கு குறிப்பிட்ட அளவு காடுகள் எவ்வளவு முக்கியமோ அதே போல குறிப்பிட்ட அளவு நீர் நிலைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உடம்பிற்கு நீர் எவ்வளவு முக்கியமோ அதே போல பூமி செழிக்க போதுமான அளவு நன்நீர் முக்கியம். நன்நீர் நிலையை சார்ந்தே மனிதர்கள் உட்பட பல உயிர்கள் இந்த பூமியில் வாழ்கிறது.

இப்படியான நீர்நிலைகளை பாதுகாப்பது ஒரு தேசிய இனத்தின் கடமையாகும். ஒரு தேசிய இனத்தின் அரசானது இன நலனை கருத்தில் கொண்டும், வரும் தலைமுறையை கருத்தில் கொண்டும் நீர் நிலையை பெருக்க வேண்டுமே தவிர சுருக்கக் கூடாது. இதை கருத்தில் கொண்டு தான் தமிழ் முன்னோர்கள் பல நீர்நிலைகளை உருவாக்கினார்கள். கோவில் தெப்பக் குளங்கள் கூட நீர்பிடிப்பு பகுதியாகவே செயல்பட்டது. ஆனால் தற்போது நிலைமை ஒரு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தை ஆண்ட தமிழர் அல்லாத திராவிட அரசுகள் தமிழகத்தின் நீர் நிலையில் சிறிதும் அக்கறை கொள்ளாமல் இருக்கும் நீர் நிலைகளையும் ஆக்கிரமிக்கும் வேலையை செய்கிறது. பல ஏரிகளை மனை வணிகம் செய்ய வணிகர்களிடம் தாரை வார்த்து கொடுத்தது தமிழக அரசு. பல குளங்கள் தூர் வாராமல் வற்றிப் போகச் செய்தது. தண்ணீர் மற்றும் குளிர்பான வணிகத்திற்கு பல நீர்நிலைகளை இரையாக்கியது. இங்குள்ள அமைச்சர் பெருமக்கள் வாழ மக்களின் நீர்நிலைகள் சுருக்கப்பட்டு ஏரிக்கரைகள் மனைப் பிரிவாக மாற்றப்பட்டது. ஒரு தேசிய இனத்தின் மீது அக்கறை இருந்தால் அரசு இப்படியெல்லாம் செய்யுமா ? இன்று போரூர் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால் இந்த போரூர் ஏரியைப் போல பல நூறு ஏரிகளை நாம் ஏற்கனவே இழந்துவிட்டோம் என்பதே கசப்பான உண்மையாகும். ஒரு தேசத்தின் மொழி உரிமை, பண்பாடு உரிமை, ஆட்சி உரிமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு நீர் உரிமையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது இந்திய அரசியல் சாசனம் கூறினாலும் அரசுகள் இதற்கு செவி சாய்ப்பதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் நீர் நிலைகளை பாதுக்காக்கவும் பெருக்கவும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் கூட ஒரு சிறிய குளங்களை ஏற்படுத்தி விடுகிறார்கள். ஏரிகளை பூமிக்கு அடியில் இணைக்கும் வேலைகளை செய்கிறார்கள். இதனால் கோடை காலத்தில் கூட ஏரிகளில் தண்ணீர் வற்றுவதில்லை. இப்படியான செயல்திட்டத்தை தமிழக அரசும் நடைமுறைப் படுத்த வேண்டும். வரும் தலைமுறைக்கு நாம் பல நீர்நிலைகளை விட்டுவிட்டு செல்லவேண்டும் . நீர்நிலைகளை சுருக்கும் வேலையை இத்துடன் தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில் பயணித்து நம் நீர்நிலைகள் யாவையும் மீட்போம். செழிப்பான தமிழ்த் தேசத்தை உருவாக்குவோம்.

நீரின்றி அமையாது உலகு - வள்ளுவம்

[vuukle-powerbar-top]

Recent Post