Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தலைக்கவசம் விற்பனையாளர்கள் அராஜகம். தலைக்கவச விற்பனையை முறைப்படுத்தத் தவறிய தமிழக அரசு !

சூலை 1 ஒன்று முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கட்டாயமாக அணியவேண்டும் என்று அரசு உத்தரவிட்ட நிலையில் தலைக்கவசங்களை வாங்க பொதுமக்கள் கடைகளில் அலைமோதினர். மாலை 6 மணிக்கு மேல் எந்த கடைகளிலும் தலைக் கவசம் இருப்பில் இல்லை.  மக்களின் திடீர் வரவை கருத்தில் கொண்ட தலைக்கவச விற்பனையாளர்கள் தலைக்கவச விலையை தாங்களே நிர்ணயம் செய்தனர். 500 ரூபாய் மதிப்புள்ள தலைக்கவசம் 800 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பல கடைகளில் 1500 ரூபாய்க்கு குறைவான தலைக் கவசங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கினர் தலைக்கவச வணிகர்கள். மேலும் இந்த தலைக்கவச உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வடநாட்டில் தான் உள்ளது. அங்கிருந்து தமிழகத்திற்கு போதுமான அளவு தலைக்கவசங்கள் வரவில்லை என்று வணிகர்கள் கூறுகின்றனர்.

சென்னையில் மட்டுமே 35 இலட்சம் இரு சக்கர வாகனங்கள் ஓடுகின்றன. ஒரு வாகனத்திற்கு இரு தலைக் கவசங்கள் தேவைப்படுகின்றன . அதாவது 70 இலட்சம் தலைக் கவசங்கள் தேவை.  இதில் சில இலட்சம் பேர்கள் தான் தலைக் கவசங்களை வைத்துள்ளனர் . பல இலட்சம் பேர்கள் இத்தனை காலம் தலைக்கவசம் இல்லாமல் தான் வாகனங்களை ஓட்டி வந்துள்ளனர். இப்போது அரசு பிறப்பித்துள்ள கட்டாய தலைக்கவச ஆணையால் கடைசி நேரத்தில் மக்கள் தலைக்கவசங்களை வாங்க அலைமோதுகிறார்கள். மக்களுக்கு சம்பளம் கிடைக்கும் போது தான் தலைக் கவசங்களை வாங்க முடியும் என்ற நிலையில் சூலை 1 ஆம் தேதி அன்று தான் பலரும் கடைக்களுக்கு தலைக்கவசம் வாங்க படையெடுத்தனர் . இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்திய தலைக்கவச வணிகர்கள்  தலைக்கவச விலையை தங்கள் விருப்பம் போல நிர்ணயம் செய்தனர் . ஒரு பெரும் பகல் கொள்ளையே தமிழகத்தில் நடந்து முடிந்து விட்டது. இதை கண்டும் காணாமல் தமிழக அரசும் வேடிக்கை பார்த்தது. ஒரு பக்கம் காவல்துறை தலைக்கவசம் இல்லாத பொதுமக்களை மிரட்ட இன்னொரு பக்கம்  வணிகர்கள் அப்பாவி பொதுமக்களை சென்று ஏமாற்றும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியது.

தலைக்கவசத்தை அநியாய விலையில் விற்ற நிறுவனங்கள் மீதும் விற்றுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொது மக்களின் கடைசி நேர படையெடுப்பை தவிர்க்க தலைக்கவசத்தை கட்டாயமாக்கும் உத்தரவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் சார்பாக நாம் முன்வைக்கிறோம். எல்லோரும் நியாயமான விலையில் தலைக்கவசம் வாங்க தலைக்கவச விற்பனையை அரசே முன்னின்று முறைப்படுத்தவும் வேண்டும்

[vuukle-powerbar-top]

Recent Post