Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்நாடு அரசின் கொள்கை இரு மொழிக் கொள்கை தான் என்று தமிழக அரசு அறிவிப்பு. கட்டாயமாக இந்தியை திணிக்கும் பள்ளிகளின் உரிமத்தை அரசு இரத்து செய்ய வேண்டும் !!

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நடுவண் அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தி அரசு மட்டுமல்லாமல் பல இந்தி ஆதரவு அமைப்புகள் இந்தியை தமிழகப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க பலமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்திய அரசு தமிழை ஆட்சி மொழியாக்காமல் , மொழிச் சம உரிமையை காலில் போட்டு மிதித்துவிட்டு இந்தியை மட்டும் இந்தி அல்லாத மக்களிடம் திணித்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக மக்களிடம் கருத்துக் கணிப்பு கேட்டு இந்தியையும், சமஸ்கிருத மொழியையும் தமிழக பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது இந்திய அரசு. தமிழ் மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்படாத நிலையில் தமிழக அரசு  இந்த மும்மொழித் திட்டத்தை ஏற்கக் கூடாது என்ற கோரிக்கையை தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழக அரசுக்கு வைத்தது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு , இருமொழித் திட்டம் தான் தமிழக அரசின் கொள்கை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு தன்னுடைய கொள்கையை அறிவித்துள்ள நிலையில், இந்த கொள்கைக்கு விரோதமாக பல தனியார் பள்ளிகள் இந்தியை கட்டாய பாடமாக மாணவர்களிடம் திணித்து வருகின்றன. தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தான் இருமொழிக் கொள்கையின் கீழ் வருகிறது. பிற மொழிகள் எல்லாம் விருப்பப் பாடமாகத் தான் இருக்க வேண்டுமே  தவிர கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது. இருமொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாடு மாநிலம் கல்வி அறிவிலும் பொருளாதார வளர்ச்சியிலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. இந்தி மாநிலங்கள் அனைத்தும் பின்தங்கிய மாநிலங்களாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஆகவே, அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழியாகும் வரை  எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசு இரு மொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்கக் கூடாது. இந்தியை வலுக்காட்டாயமாக மாணவர்களிடையே திணிக்கும் தனியார் பள்ளிகளுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும். தமிழக அரசு இப்படியான தனியார் பள்ளிகளை கண்காணித்து இப்பள்ளிகளின் உரிமத்தை இரத்து செய்ய வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.


[vuukle-powerbar-top]

Recent Post