Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய சுதந்திர நாளில் அனைத்து மொழிகளும் ஆட்சிமொழியாக மாபெரும் ட்விட்டர் பரப்புரை !

இந்தித் திணிப்புக்கு எதிராகவும் அனைத்து மாநில மொழிகளையும் இந்திய அரசின் ஆட்சி மொழியாக்கவும் வரும் ஆகத்து 15 ஆம்நாளில் இந்திய மக்கள் பலரும் மாபெரும் ட்விட்டர் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.

தொடர்ந்து இந்திய அரசு இந்தியை இந்தி அல்லாத மாநிலங்களில் பல்வேறு வகையில் திணித்து வருகிறது. இந்தியை திணிப்பது மட்டுமல்லாமல் இந்தி அல்லாத பிற தேசிய மொழிகளை இந்திய அரசு மதிப்பதே இல்லை. தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே வந்தாலும் அது இந்திய அரசின் காதுகளுக்கு எட்டவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆனாலும் இந்திய மொழிகளில் இந்தியை தவிர வேறு எந்த மொழியும் விடுதலை அடையவில்லை. அதனால் வரும் ஆகத்து 15  இந்திய சுதந்திர நாளில் இந்திய அரசுக்கு கேட்கும்படியான ஒரு செய்தியை சமூக வலைத்தளங்களில் பதிவிட பல தேசிய இன மக்கள் அணியமாகி வருகின்றனர். மொழி உரிமையை போற்றும் அனைவரும் இந்த நாளில் இந்தித் திணிப்புக்கு எதிராகவும் மொழி உரிமைக்காகவும் குரல் கொடுக்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த பரப்புரையில் பங்கு கொள்பவர்கள் கட்டாயம் ட்விட்டர் கணக்கு வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உடனடியாக ஒரு ட்விட்டர் கணக்கும் தொடங்கலாம். பரப்புரையில் கலந்து கொள்பவர்கள் ஆகத்து 15 ஆம் தேதி காலை முதல் இந்தித்திணிப்புக்கு எதிராக இந்த குறியீட்டை #StopHindiImposition பயன்படுத்தி உங்கள் செய்தியை இந்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். என்ன பதிவிடுவது என்று தெரியவில்லை என்றால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று ஏதேனும் ஒரு பதிவை தேர்வு செய்து ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவிடலாம்.  ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தக் குறியீட்டை பயன்படுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யலாம். தமிழிலும் ஆங்கிலத்திலும் அல்லது எந்த மொழியில் வேண்டுமானாலும் பதிவிடலாம்.

இணைப்பு: https://docs.google.com/document/d/11oEhZTdO1B1ptNUGvB2bD62oV58VaW_4gknCGpV5SDU/pub

இப்பரப்புரை வெற்றி பெறுவது மக்களின்  கைகளில் தான் உள்ளது. ட்விட்டர் இணையதளத்தில் முதல் குறியீடாக இந்த செய்தி வருமென்றால் நாடு முழுவதும் இச்செய்தி பரவும். இந்திய அரசின் காதுகளுக்கும் எட்டும். இந்தித்திணிப்பை தடுப்போம், தமிழ் மொழி உட்பட அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவோம். வாழ்க தமிழ்!

இராச்குமார் பழனிசாமி
தமிழர் பண்பாட்டு நடுவம் 
[vuukle-powerbar-top]

Recent Post