Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தென்னிந்திய தொடர்வண்டித் துறையில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழர்கள். இந்தி அரசின் இனவெறிப் போக்கு !

தமிழகத்தில் இயங்கும் தென்னிந்திய தொடர்வண்டித் துறையில் தமிழர்கள் திட்டமிட்டு வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பலரும் இப்போது பேசத் தொடங்கி உள்ளார்கள். ஐ.சி.எப் என்ற இரும்புப் பெட்டி தொழிற்சாலையில் கூட தமிழர்களை இப்போது பணியில் அமர்த்துவதில்லை இந்திய அரசு நிறுவனம் . பல்லாயிரம் பயிற்சி முடித்த தமிழர்களுக்கு வேலை வாய்ப்பும் மறுக்கப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் இது வரை 30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தற்கொலையும் செய்துள்ளனர் என்பது வேதனையான செய்தி. ஆர்.ஆர். பி என்னும் தொடர்வண்டித்துறை தேர்வு எழுதவும், அந்த வேலைவாய்ப்பை தமிழகத்தில் அறிவிக்காமல் வேண்டுமென்றே இந்தி மாநிலங்களில் சென்று தேர்வை வைத்து அங்கேயே ஆட்களை எடுக்கிறது தொடர்வண்டி நிர்வாகம். தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பை வடநாட்டு இந்திக்காரர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து வரும் இந்திய அரசின் இந்தப் போக்கு இனவெறி இல்லாமல் வேறு என்ன ?

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் 80% தர வேண்டும் என்ற சட்டமும் இருக்கிறது. இருந்தும் தொடர்வண்டித்துறை 90% வடநாட்டு மக்களுக்கும் கேரளா மக்களுக்கும் தமிழகத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது. விளைவு தமிழக தொடர்வண்டி நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு அலுவலர்கள், தொடர்வண்டி ஊழியர்கள், பயணசீட்டு பரிசோதகர் என அனைத்து இடங்களிலும் இந்திக்காரர்கள், மலையாளிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இது எவ்வளவு பெரிய தமிழின விரோதப்போக்கு. தமிழகத்தை திட்டமிட்டு கலப்பின தாயகமாக்க இந்தி அரசு முடிவெடுத்துள்ளது. அதனால் இந்தியர்களை பெருமளவில் தமிழகத்தில் குடியேற்றி வருகிறது. இந்தியர்களின் பிள்ளைகள்  படிக்க கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளை திறந்து வைத்துள்ளது இந்திய அரசு . இந்தியர்கள் வசதிக்காக தமிழர்கள் அனைவரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று பலமான பரப்புரையும் செய்து வருகிறது இந்தி அரசு.

இதை எதிர்த்து இப்போது பெரிய போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. தமிழக அரசுக்கும் பல மனுக்களை தமிழர்கள் கொடுத்துள்ளனர். எனினும் தமிழக அரசு இந்த மனுக்களை வழக்கம் போல கண்டுகொள்ளவில்லை. அதனால் சொந்தமண்ணில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தொடர்வண்டித் துறைக்கு எதிராக பலமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தொடர்வண்டி அலுவலகங்களை முற்றுகையிட வேண்டும் . தொடர்வண்டித் துறையில் தமிழுக்கும் தமிழர்களுக்கு உரிய இடத்தை கொடுக்க வேண்டும் அல்லது தமிழகத்தில் இருந்து இந்த துறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்க வேண்டும்.

நடுவண் அரசின் நிறுவனங்களில் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், தமிழர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும். இதை செய்தால் மட்டுமே தமிழர்களின் மொழி, வேலை வாய்ப்பு உரிமைகளை தமிழர்கள் தக்க வைக்க இயலும்.



[vuukle-powerbar-top]

Recent Post