Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

The 10th World Hindi Conference (WHC) is being organized from 10-12 September 2015 in the city of Bhopal by the Ministry of External Affairs, Government of India in partnership with the Government of Madhya Pradesh. The decision to organize the 10th edition of the Conference in India was taken at the 9th World Hindi Conference held in Johannesburg, South Africa in September 2012.


பிற மொழிகளை மதிக்காது  இந்தி மாநாட்டிற்கு மட்டும் உதவும் இந்திய அரசுக்கு கண்டனம் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு !

எதிர்வரும் செப்டம்பர் 10-12 தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் , மத்திய பிரதேச அரசும் இணைந்து உலக இந்தி மாநாட்டை போபால் நகரில் நடத்த உள்ளன. இந்தி மொழிக்கான மாநாட்டை இந்தி மாநிலமான மத்திய பிரதேசம் ஏற்பாடு செய்வதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இயங்க வேண்டிய இந்திய ஒன்றிய அரசு இந்த மாநாட்டிற்கு உதவி செய்வது அதன் பக்க சார்பு தன்மையை வெளிபடுத்துவதாக உள்ளது.

ஏற்கனவே இந்தியா முழுவதும் இந்தியை மும்முரமாக திணித்து வருகிறது இந்திய அரசு. அனைத்து நடுவண் அரசு நிறுவனங்களிலும் கட்டாய இந்தி வாரம் அனுசரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லா வேலை வாய்ப்புகளும் இந்தி தெரிந்தவர்களுக்கு எளிமையாக கிடைக்கும் படி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பழம்பெரும் செம்மொழியான தமிழ் மொழிக்கு இதுவரை ஆட்சி மொழி தகுதியை வழங்க மறுத்து வருகிறது இந்திய அரசு. தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் இந்திக்கு நிகரான ஆட்சி மொழி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இது வரை இந்திய அரசு செவி சாய்க்கவும் இல்லை.

இந்நிலையில் இந்திய அரசே முன்னின்று இந்திய பிரதமர் அவர்களின் தலைமையில் இப்போது உலக இந்தி மாநாட்டை போபாலில் நடத்த உள்ளது பிற மொழிகள் பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக தங்களை சிந்திக்கும்படி  தூண்டியுள்ளது. காரணம் உலகத் தமிழ் மொழி மாநாட்டிற்கு இந்திய அரசு எந்த உதவியும் செய்வதில்லை. கன்னடம், தெலுங்கு , மலையாளம் போன்ற சிறப்பு வாய்ந்த தென்னிந்திய மொழிகளுக்கு எந்த மாநாட்டையும் நடத்த இந்திய அரசு முன்வர வில்லை. ஆனால் இந்தி மாநாட்டிற்கும், சமஸ்கிருத மாநாட்டிற்கும் பெருமளவில் நிதி உதவி செய்கிறது இந்திய அரசு. உலகமெங்கும் இந்த செய்தியை ஊடகம் மூலமாக கொண்டு செல்கிறது.  இது மட்டுமல்லாமல் இந்த மாநாட்டை ஒட்டி இந்தி மொழியை ஐ.நா வின் அலுவல் மொழியாக ஆக்க பெருமுயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஐநா வில் இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்த ஆண்டுக்கு சுமார் 260 கோடி வரை செலவாகும். இந்த செலவை இந்திய அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளது இந்திய அரசு. ஐ.நா.வில் இந்தியை அலுவல் மொழியாக கொண்டு வரத் துடிக்கும் இந்திய அரசு ஏன் இந்திய பாராளுமன்றத்தில் எல்லா மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக பயன்படுத்த  மறுக்கிறது? பாராளுமன்றத்தில் அனைத்து மாநில மொழிகளிலும் ஆவணங்கள் , அறிக்கைகள், மொழிபெயர்ப்புகளை அச்சடிக்க, உருவாக்க  ஆண்டுக்கு 260 கோடிக்கும் கீழே தான் செலவாகும். ஆனால் இதை செய்ய மறுக்கும் இந்திய அரசு இந்தி மொழியை மட்டும் ஐ.நா வின் அலுவல் மொழியாக்க இந்திய மக்களின் வரிப்பணத்தை செலவு செய்ய தயாராக உள்ளது .

இந்திய அரசின் இத்தகைய பாரபட்ச மொழிக்கொள்கை   இந்தி அல்லாத மக்களை பெரும் கவலையில் ஆழ்ந்தும் விதமாக அமைந்துள்ளது. இந்திய அரசின் இந்தி ஆதரவு பக்க சார்பான செயல்பாடுகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இந்தித் திணிப்பை உடனடியாக இந்திய அரசு நிறுத்திக் கொள்வதோடு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது. இக்கோரிக்கையை தமிழக அரசும் இந்திய அரசுக்கு முன்மொழியுமாறு  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கிறது.

இராச்குமார் பழனிசாமி
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு




[vuukle-powerbar-top]

Recent Post