Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவின் முதன் மாந்தன் தமிழனே ! இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் வாழ்ந்த குடியம் குகைகள் - ஒரு சுற்றுப்பயணம் ! 

சென்னையின் இருந்து சுமார் 60 கி,மீ தொலைவில் பூண்டி  நீர்த்தேக்கம்  அருகே அமைந்துள்ளது அள்ளிகுளி மலைத்தொடர் . இங்கு தான் பழங்கற்கால தமிழர்கள் வாழ்ந்து வந்த குடியம் குகைகள் உள்ளன. சுமார் 20 சிறு மற்றும் பெருங்குகைகள் இங்கு உள்ளன. இக்குகைகளை முதலில் ஆங்கிலேய ஆய்வாளர் (British geologist Robert Bruce Foote)  ராபர்ட் புரூஸ் என்பவர் தான் அடையாளம் கண்டார். இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கற்கால மனிதன் தொடங்கி புதிய கற்கால மனிதர்கள் வரை இக்குகைகளில் வாழ்ந்துள்ளனர் என்பது ஆங்கிலேயே புவி ஆய்வு நிபுணர் கண்டுபிடித்தார். இதன் பின்னர் 1960 களில் இந்திய தொல்லியல் துறை இந்த குகைகளில் ஆய்வுகள் நடத்தியது. அப்போது தான் தமிழனின் வரலாறு பல லட்சம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் என்பதை இந்திய அரசு அறிந்தது. இந்த ஆய்வுக்கு பிறகு வழக்கம் போல தமிழனின் தொன்மை குறித்த சான்றுகளை வெளிக்கொணர இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. தமிழக அரசும் இந்த அரிய கண்டுபிடிப்பை பற்றி பெரிய அளவில் தமிழர்களிடையே எடுத்துச் செல்லவும் இல்லை . இன்று தமிழர்கள் பலருக்கும் இந்த குடியம் குகைகளை பற்றியே தெரியாது. 

இக்குகைக்கு செல்ல நாம் நம்முடைய சொந்த வாகனத்தை தான்  எடுத்துச் செல்ல வேண்டும். பேருந்து வசதி எல்லாம் இங்கு இல்லை. நம் வாகனம் மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு கிராமம் வரை தான் செல்லும். அதன் பிறகு ஐந்து கி.மீ காடுகள் வழியே நடந்து தான் செல்ல வேண்டும். தொடக்கத்தில் பாதை நல்லபடியாகத் தான் இருக்கும். போகப் போக பாதையெங்கும் கூழாங்கற்கள், முற்புதர்கள், பாறைகள்  தான் இருக்கும். இதன் மீது ஏறி பயணம் செய்ய கட்டாயமாக நல்ல மூடிய காலணி (ஷூ)  இருக்க வேண்டும். நிறைய தண்ணீர் , உலர்ந்த உணவுகள் கொண்டு செல்வது நல்லது. நிச்சயம் முதலுதவி பெட்டியை எடுத்து செல்ல வேண்டும். வயதானவர்கள், நோயாளிகள், கைகுழந்தைகளை தயவு செய்து இப்பாதை வழியாக குகைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம். 

இங்கு செல்பவர்கள் ஒரு குழுவாக பயனித்தல் நலம். குறிப்பாக அந்த ஊரை சேர்ந்த வழிகாட்டி ஒருவரை அழைத்து செல்லவேண்டும். புவி ஆய்வு , தொல் பொருள் ஆய்வு செய்வோர்கள் நம்முடன் வந்தால் பல விளக்கங்கள் நமக்கு கிடைக்கும். இங்கு கோடிக்கணக்கான கற்கள் உள்ளன. அவற்றில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய கற்களும் உள்ளன. டைனாசர் என்னும் ராட்சத பல்லிகளின்  முட்டைகளும் இப்பகுதியில் உள்ளன. அவற்றை நாம் அடையாளம் காண வேண்டும்.  ஒரு ஆய்வுக் குழுவாக வரலாற்றில் ஆர்வமுள்ள இளையோர்கள் இந்த இடத்திற்கு சென்று வந்தால் நிறைய பயனுள்ள தகவல்களை திரட்டலாம். வழித்தடம் எதுவும் சரியாக இல்லாததால் இங்கு தொலைந்து விட்டால் மீண்டும் வருவது கடினம். அதனால் ஒருவருக்கு ஒருவர் துணையாக செல்ல வேண்டும். 

நாங்கள் குடும்பமாக மிகவும் சிரமப்பட்டு தான் இந்த குகைகளை வந்தடைதோம். எங்களுக்கு முன்பு சென்ற இளைஞர் குழு ஒன்று வழிதெரியாமல் காட்டை சுற்றி சுற்றி வந்தனர். பிறகு அவர்களையும் அழைத்துக் கொண்டு குகைகளை நோக்கி பயணித்து அவர்களுக்கும் வழி காட்டினோம்.எங்களுடன் அந்த ஊரை சேர்ந்த சிறுவன் வழிகாட்ட உதவினான். இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் இக்குகைகளில் வாழ்ந்தனர் என்பதை நினைக்கும் போது வியப்பளிக்கிறது . இவ்வளவு பெரிய நீண்ட நெடிய வரலாற்றுக்கு தமிழர்கள் சொந்தக்காரர்கள் என்று நினைக்கும் போது பெருமையும் மேலிடுகிறது. உலக அளவில் சுற்றுலாத் தலமாக அடையாளம் காணப்பட வேண்டிய இக்குகைகள் இப்போது யாரும் செல்ல முடியாத பகுதியாகவும் சமூக விரோதிகள் பயன்படுத்தும் கூடாரமாகவும் மாறியுள்ளது என்பது வேதனை. 

தமிழக அரசு இக்குகைகளை குப்பைகள் இல்லாமல்  சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பு இல்லாமல் பார்ப்பதோடு இக்குகைகளை தமிழக அரசின் பாதுகாப்பிற்குள் முழுவதும் கொண்டு வர வேண்டும். உலகத் தமிழர்களின் பார்வைக்கு இக்குகைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியம் குகைகள் உலக நாகரீகம் தோன்றுவதற்கான தொட்டில் என்றும் அறிவிக்க தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டியது குடியம் குகைகள். வாய்பிருந்தால் மீண்டும் ஒரு முறை ஒரு குழுவாக நாம் இங்கு சென்று ஆய்வுகள் மேற்கொள்வோம்.  

குடியம் குகைகள்  குறித்த ஆவணப் படம் : https://www.youtube.com/watch?v=qZCpqPExEMM

பின் குறிப்பு : இங்கு செல்பவர்கள் தயவு செய்து இங்கு குப்பைகளை வீச வேண்டாம். முடிந்தால் அங்குள்ள குப்பைகளை சில பைகளில் சேகரித்து அவற்றை வெளியே வந்து நகர்ப்புறங்களில் அப்புறப்படுத்த வேண்டுகிறோம்.   
[vuukle-powerbar-top]

Recent Post