Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கடலூருக்கு தேவை தற்கால உதவி மட்டுமல்ல நீண்ட கால மீட்பு செயல்திட்டம் !

கடலூருக்கு அண்மையில் வெள்ளத் துயர் நீக்கும் பணியின் நிமித்தமாக சென்று வந்தோம். சென்னையில் பல இடங்களில் துயர் நீக்கும் பொருட்களை வழங்கிய பின்னர் கடலூர் மாவட்டத்திற்கு எங்களால் முடிந்த உதவிப் பொருட்களை சேகரித்து கொண்டு குறிப்பிட்ட சில கிராமங்களை தேர்வு செய்து சென்றோம். அதில் ஒன்று தியாகவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமங்கள் ஆகும்.

சமூக பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய தொல் தமிழர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றோம். அங்குள்ள மக்கள் இன்னும் நாற்பது ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலே தான் இருக்கிறார்கள் என்பதை எங்களால் அறிய முடிந்தது. ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் இவர்களுக்கு போதிய அளவிற்கு விழிப்புணர்வு கொடுக்கப்படவில்லை , இவர்களின் அறியாமையும் வறுமையும் நீக்கப்படவில்லை என்பதும் கண்கூடாகத் தெரிந்தது. இந்த பகுதிகளுக்கு அம்பேத்கர் நகர் பெரியார் நகர் என்று பெயர் மட்டும் வைத்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு தற்சார்பு வாழ்க்கை மட்டும் கொடுக்கப்படவில்லை. தங்கள் வரலாறு மற்றும் தமிழினத்தின் பெருமை அறியாத நிலையில் மிகவும் தாழ்வு மனப்பான்மையில் இந்த திராவிட கட்சிகள் இவர்களை வைத்துள்ளது என்பதை அறிய முடிந்தது. தமிழ்த்தேசிய கருத்தியல் இவர்களிடம் இம்மி அளவும் சென்று சேரவில்லை.

இம்மக்களுக்கு தேவையானவை தற்சார்பு நிலை, தன்னம்பிக்கை, வெளியுலக தொடர்பு, தன்னிலை அறிவு, பொருளாதார வலிமை . இவைகளை இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. திராவிட  கருத்தியல் காரணமாகவும்  திராவிடர் ஆட்சிகளின் ஆக்கிரமிப்பின் காரணமாகவும் இவர்கள் இழந்தது ஏராளம். இவர்களை மீள்கட்டமைக்க தமிழ்த் தேசிய கருத்தியல் கொண்ட தன்னார்வலர்கள் இவர்களை சந்திக்க வேண்டும். இவர்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் முன்னேற பல கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இருக்கும் வளங்களை வைத்து பொருள் ஈட்டும் உத்திகளை இவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தன்னிறைவு அடையக் கூடிய வழிமுறைகளை இவர்களுக்கு கற்பிக்க வேண்டும். நகரில் உள்ள வணிகத் தமிழர்கள் இது போன்ற பின் தங்கிய கிராமங்களை நிரந்தரமாக தத்தெடுக்க வேண்டும். தொழில் கல்வி, சமகால அறிவியல் , சமூக அறிவியல் , உலக நிலை, வணிகம், தமிழக தமிழர் வரலாறு போன்ற பாடங்கள் இவர்களுக்கு சென்று சேர வேண்டும்.

இவையெல்லாம் சில மாதங்களில் நடக்காது. ஆனால் படித்த மதம் சாராத குறிப்பாக திராவிட மதம் சாராத நகர்புற இளைஞர்கள் கிராமங்கள் நோக்கி சென்று இம்மக்களுக்கு நிலையான துயர் நீக்கும் களப்பணியை மேற்கொண்டு இம்மக்களுக்கான உரிமையை கல்வியை நிலைநாட்ட வேண்டும். இப்பணியை செய்ய நாம் அணியமாக உள்ளோம். எம்மோடு இணைந்து கிராமங்களுக்கு சென்று மீள்கட்டமைக்கும் பணி செய்ய விருப்பமுள்ள தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் எம்மை தொடர்பு கொள்ளலாம்.

- இராச்குமார் பழனிசாமி





[vuukle-powerbar-top]

Recent Post