Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பராமரிப்பும் பொலிவும் இல்லாத திருவள்ளுவர் திருக்கோவில் ! தமிழர்களின் கவனத்திற்கு !

உலகத் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் வள்ளுவருக்கு போதுமான சிறப்பை தமிழக அரசு வழங்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வள்ளுவர் கோட்டம், குமரி திருவள்ளுவர் சிலை போலவே சென்னையின் உள்ள திருவள்ளுவர் திருக்கோவிலும் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தான் இன்று வரை உள்ளது. இந்த கோவிலுக்கு வருகை தருவோர் எண்ணிக்கை மிகக் குறைவு தான். இங்குள்ள வள்ளுவர் சந்நிதியில் பூசனை செய்வது வீர சைவ மரபில் வந்த ஆறுமுகம் என்ற தமிழர் ஆவார். இவர் பிராமணர் அல்லாதவர். வழிவழியாக இவர்கள் முன்னோர்கள் முதற்கொண்டு இந்த கோவிலில் பூசகராக பணியாற்றி உள்ளனர்.

இன்று இக்கோவிலுக்கு சென்று பூசகர் ஆறுமுகம் அவர்களிடம் சிறுது நேரம் உரையாடினேன் . வள்ளுவர் நாளில் மட்டும் இங்கு சிறப்பு விழாக்கள் எடுக்கப்படுகிறது என்றார். பிற நாட்களில் திருக்குறள் விழாக்கள் இங்கு நடைபெறுவதில்லை என்றும் கூறினார். தமிழக அரசின் இந்து அறநிலைத் துறையின் கீழ் தான் இக்கோவிலும் வருகிறது. இருப்பினும் தமிழ் ஆர்வலர்களின் உதவியால் மட்டுமே இங்கு விழாக்கள் எப்போதாவது நடைபெறுகிறது. வள்ளுவரின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து இந்த கோவிலில் பரிசுகள் வழங்கலாம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தமிழ் அமைப்புகள் இங்கு சென்று பராமரிப்பு பணியில் ஈடுபடலாம் . தூய்மை செய்யலாம். திருக்குறள் போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கலாம். அப்படி செய்தால் இந்த திருக்கோவில் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும். வள்ளுவரின் புகழும் மனம் வீசிக் கொண்டே இருக்கும்.

தமிழ் அமைப்புகள் இக்கோவிலை கவனத்தில் கொண்டு மற்ற கோவில்கள் எவ்வாறு பொலிவுடன் உள்ளதோ அவ்வாறே இக்கோவிலையும் பொலிவுடன் வைக்க உதவலாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழர்களுக்கு தொடர்பே இல்லாத சாய்பாபா  கோவில்கள் எல்லாம் தமிழர்களால் சிறப்பு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி தருகிறது. ஆனால் உலகம் தழைக்க அறம் வகுத்த வள்ளுவர் பெருந்தகையின் கோவில் இப்படி பராமரிப்பு இல்லாமல் தமிழகத்தில் உள்ளது என்பது நமக்கு வெட்கக்கேடு. வள்ளுவருக்கான ஒரே கோவில் இது தான் , இதையாவது பேணிப் பாதுகாக்க நாம் முன்வருவோம். தமிழ் அமைப்புகள் தங்கள் பங்களிப்பை வழங்குவதுடன் இங்கு நிகழ்சிகள் நடத்த விரும்பினால் பூசகர் ஆறுமுகம் அவர்களை தொடர்பு கொள்ளவும்.




[vuukle-powerbar-top]

Recent Post