Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கைலாய வாத்தியங்கள் முழங்க உலக மிக நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னை கடற்கரையில் வெளியிடப்பட்டது!

தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் தமிழ் ஆன்றோர் அவையும் இணைந்து வெளியிடும் இந்த திருக்குறள் பதிப்பானது 1330 அடி நீளமுள்ள உலகின் மிக நீண்ட திருக்குறள் பதிப்பாகும். இதுவரை இவ்வாறன சாதனை வரலாற்றில் நடந்ததில்லை. சென்ற ஆண்டு 400 அடி நீளமுள்ள திருக்குறள் பதிப்பை நாங்கள் வெளியிட்டோம். அதை முறியடிக்கும் விதத்தில் இந்த ஆண்டு 1330 அடி திருக்குறள் பதிப்பை வெளியிட்டு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளோம். இந்த சாதனையை கின்னஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த உலக சாதனையை உலகில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் காணிக்கையாக்குகிறோம்.

உலகின் மிகச் சிறந்த மெய்யியல், நீதி, சமூகவியல், அரசியல், இல்லறம்,    மற்றும் வாழ்வியல் நூலான திருக்குறளை உலகில் உள்ள அனைவரும் படித்து பயன்பெற வேண்டும். திருக்குறள் காட்டிய நெறிப்படி தனிமனிதர்கள் மட்டுமின்றி உலக அரசுகளும் பின்பற்றி நல்லதோர் உலகை படைக்க உறுதி பூணவேண்டும். உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒப்பற்ற திருக்குறள் அவர்கள் தாய் மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதை நினைத்து பெருமைப்படுவதோடு தங்கள் குழந்தைகளுக்கு மறவாமல் திருக்குறள் நெறியை போதிக்க வேண்டும். இப்போது நாங்கள் நிகழ்த்தியுள்ள திருக்குறள் உலக சாதனையின் மூலமாக இந்திய அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம். இந்த கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்குமாறு உலகத் தமிழர்கள் சார்பில் வேண்டுகிறோம்.

1. திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல் வேண்டும்
2. திருக்குறளை எல்லா பள்ளிகளிலும் பயிற்றுவித்தல் வேண்டும்
3. திருவள்ளுவருக்கு தமிழில் அஞ்சல்தலை நாணயம் வெளியிட வேண்டும்
4. திருவள்ளுவருக்கு பாராளுமன்றத்தில் சிலை அமைக்க வேண்டும்
5. தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குதல் வேண்டும்

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக காவல்துறைக்கு நம் நன்றியை உரித்தாக்குகின்றோம் . காரணம் , திருக்குறள் பதாகை பிடிக்க ஆள் பற்றாக்குறை ஏற்படவே , காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் பதாகை பிடிக்க முன்வந்தனர். நாம் அறிந்தவரை காவல்துறையே ஒரு பரப்புரையில் பங்குபெற்றது இதுவே முதல்முறை. பங்குபெற்ற காவல்துறையினருக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. மாணவ மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், இசைக் குழுவிற்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிதி உதவி நல்கிய தமிழர்களுக்கு சான்றிதழ் அவர்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  
[vuukle-powerbar-top]

Recent Post