Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2500 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககால நகரத்திற்கு ஒரு பயணம் !

கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வசிப்பிடமாக இக்களம் கணிக்கப்பட்டுள்ளது. கரிமத் தேதியிடல் முறை மூலம் இன்னும் இது துல்லியமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டியர்களின் தொல்நகரான "பெருமணலூர்" இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இங்கு பழங்கால சுடுமண் உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பட்டினப்பாலை கூறும் 'உறைகிணற்றுப் புறச்சேரி' என்ற தொடருக்குச் சான்று பகர்வனவாகவும், ஆற்றங்கரைகளிலும், பெரிய குளக்கரைகளிலும் இவ்வாறு உறைகிணறுகள் அமைத்து நீரெடுக்கும் தமிழரின் பண்டைய வழக்கத்தை எடுத்துக்காட்டுவனவாகவும் உள்ளது.

இங்கு ஆய்வில் உள்ள தொல்லியல்துறை மாணவர்களுடன் பேசினோம். இங்குள்ள கண்டுபிடிப்புகளை இந்திய தொல்லியல் துறை பெங்களூருக்கு எடுத்துச் செல்வதாக கூறினர். அங்கிருந்து எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. ஏற்கனவே பல முதுமக்கள் தாழிகள் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து காணாமல் போனது. தமிழர்களின் பழம்பெருமைமிக்க சுவடுகளை முடிந்தவரை மறைக்கவே இந்திய அரசு முயலும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் தமிழக தொல்லியல் ஏன் இவற்றை பாதுகாக்க முன்வரவில்லை என்று தெரியவில்லை. தமிழர்களுக்கு தொடர்பே இல்லாத இந்தியர்கள் தான் இங்கு மேற்பார்வை செய்து வருகிறார்கள். இந்தியில் தான் பேசுகிறார்கள் . இவர்களை நம்பி தமிழக வரலாறு இருக்கிறது என்பது தான் வேதனை.

தமிழர்கள் வரலாற்று சுவடுகளை பாதுகாக்க அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்பதை இனியாவது உணர வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த இடத்தை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இங்கு தமிழர் தொன்மையை விளக்கும் அருங்காட்சியத்தை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் விருப்பமாகும்

[vuukle-powerbar-top]

Recent Post