Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆதார் இல்லை என்றால் வாழும் உரிமை மறுக்கப்படுமா ?

இப்போது ஆதார் அட்டையை ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் பெற வேண்டும் என்பதற்கு பாஜக அரசு குறுக்கு வழியில் (பணச் சட்டத்தின் மூலமாக)  ஆதார் சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நிதி சட்டமாக தாக்கல் செய்யப்பட்ட ஆதார் சட்டத்தில் பல கேள்விகளுக்கு அரசு பதில் தராமல் உள்ளதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

முதலில் ஆதார் அட்டை குடியுரிமைக்கான அடையாளம் அல்ல என்று ஆதார் சட்டம் கூறியுள்ளது. அதன்பின்னர் ஆதார் அட்டை அரசின் மானியம் பெறுவதற்குத் தான் பயன்படுத்தப்படும் என்றும் கூறுகிறது ஆதார் சட்டம். பொதுவாக அரசின் மானியம் பெறுபவர்கள் நாட்டின் குடிமக்களே தவிர வேறு யாரும் இல்லை . அப்படியென்றால் இந்த ஆதார் அட்டையை ஏன் குடியுரிமைக்கான சான்றிதல் என்று அறிவிக்க அரசு தயங்குகிறது? மேலும் ஆதார் அட்டை குடியுரிமைக்கான அடையாளம் இல்லை என்றால் வேறு எந்த அட்டை மக்களின் குடியுரிமைக்கான அட்டை என்பதை அரசு விளக்க வேண்டும்? ஆதார் அல்லாத வேறு ஒரு அட்டை குடியுரிமைக்கான அட்டை என்று கொள்ளப்படும் என்றால் ஆதார் இல்லாத ஒரு குடிமகனுக்கு எந்த வித அடிப்படை உரிமையும் மறுக்கப்படக் கூடாது அல்லவா ? பின் ஏன் ஆதார் அட்டை கட்டாயப்படுத்தப் பட வேண்டும்?

மானியம் பெறுவதற்கு மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவரின் கைரேகை கண்விழிப் படலங்கள் அனைத்தும் அரசின் பதிவேட்டில் இடம்பெற வேண்டும் என்றும் ஆதார் சட்டம் சொல்கிறது . அப்படி என்றால் ஆதார் அட்டையின் நோக்கம் மக்களுக்கு மானியம் அளிக்கவா அல்லது மக்களை கண்காணிக்கவா என்ற கேள்வியும் எழுகிறது . இது நாட்டு மக்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது போல ஆகாதா ?

அடுத்தது, ஆதார் அட்டையை அரசு மட்டுமே கையாளப் போவதில்லை. தனியார் நிறுவனங்களும் மக்களின் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தலாம் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஒரு தனி மனிதனின் அடையாளத்தை தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? கைரேகை மற்றும் கண்விழிப்படலங்கள் தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்படாது என்ற உறுதியை ஏன் அரசு கொடுக்கவில்லை? யார் வேண்டுமானாலும் ஒருவரின் ஆதார் அட்டை தகவல்களை பெற முடியும் என்றால் ஒரு தனிமனிதனின் நடமாட்டம் என்பது இனி இந்நாட்டில் கேள்விக்குறியாகும். இதன் மூலம் மனிதனின் அடிப்படை வாழும் உரிமை மறுக்கப்படும்.

மேலும் கைரேகையை கொண்டு ஒரு மனிதனை அடையாளம் காணலாம் என்பது அறிவியல் பூர்வமாக சாத்தியப்படாத ஒன்றாகும். நாட்டில் 30% உழைக்கும் மக்களுக்கு கைரேகை தேய்ந்திருக்கும் . ஒருவேளை இவர்களின் கைரேகை அடையாளம் காணப்படவில்லை என்றால் அவர்களின் மானிய உரிமை ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது . ஏழைகளின் அடிப்படை மானிய உரிமை மறுக்கப்படும் போது அவர்கள் வாழும் உரிமையும் மறுக்கப்படுகிறது.

ஆதார் அட்டையை எந்தெந்த நிறுவனங்கள் பயன்படுத்தலாம் , எந்தெந்த சேவைக்கு பயன்படுத்தலாம் என்ற எந்த வரையறையும் ஆதார் சட்டத்தில் சொல்லப்படவில்லை. ஒரு சில மாநிலங்களில் எரிபொருள் நிரப்ப ஆதார் அட்டை கேட்கப்பட்டது, இன்னொரு மாநிலத்தில் பதிவு திருமணம் செய்ய ஆதார் அட்டை கேட்கப்பட்டது. இப்படியாக ஒவ்வொரு சேவைக்கும் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்துவது நாட்டு மக்களை நிரந்தர அடிமையாக்கும் முயற்சி என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதனால் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த சேவைக்கு ஆதார் அட்டையை கேட்க வேண்டும் என்பதையும் ஆதார் சட்டத்தில் கொண்டுவர வேண்டும் . புதிய நிறுவனங்கள் ஆதார் அட்டையை கேட்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தை ஆதார் சட்டத்தில் சேர்க்க மீண்டும் பாராளுமன்றத்தின் மூலமாகத் தான் ஒப்புதல் பெற வேண்டும். இல்லையென்றால் நாளை பொதுக் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்கக் கூட ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தலாம்.

தனிமனித உரிமை மீறல், அடையாளத் திருட்டு , நிறுவனங்கள் கண்காணிப்பு , சுதந்திர நடமாட்டத்திற்கான உரிமை பறிப்பு, தனிமனித விவரங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தவறானவர்கள் கைகளில் சிக்குவது போன்ற பல கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்கவில்லை. ஒரு குடிமகன் விரும்பினால் ஆதார் அட்டை இல்லாமலும் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளும் பெற்று வாழலாம் என்ற உறுதியை நடுவண் அரசு கொடுக்க வேண்டும். இல்லையெனில் இப்படியான திட்டத்தை அரசு ரத்து செய்யவேண்டும் . இதை செய்யத் தவறினால் இந்த அரசை, இந்த அரசியல் அமைப்பை மக்களே கலைக்க முன்வருவார்கள்.

ஆதார் அட்டையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை என்றால் மாநில அரசுகள் ஆதார் அட்டையை மக்களிடம் எந்த காரணத்திற்காகவும் கேட்கக் கூடாது. உச்சநீதி மன்றத்தின் ஆணைக்கு தக்கவாறு ஆதார் அட்டையை எந்த சேவைக்கும் அரசோ தனியார் நிறுவனமோ கட்டாயப்படுத்துதலும் கூடாது. நடுவண் அரசு மக்களின் அடிப்படை வாழும் உரிமைக்கு வழிவகுக்குமா அல்லது  உலை வைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- இராச்குமார் பழனிசாமி
















[vuukle-powerbar-top]

Recent Post