Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழை இந்தியாவின் ஆட்சி  மொழியாக்க தமிழகக் கட்சிகள் என்ன செயல் திட்டம் வைத்துள்ளன? -  தமிழர் பண்பாட்டு நடுவம் கேள்வி.

இந்திய நாடு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை அடைந்தாலும் இந்திய தேசிய இன மக்களுக்கு இன்னும் முழு விடுதலை கிடைக்கவில்லை. அதற்கு காரணம் இந்தியை தவிர வேறு எந்த இந்திய மொழியும் இந்தியாவின் ஆட்சி மொழித் தகுதியை பெறவில்லை. இந்திக்கு தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்த மொழிக்கும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் இந்தி அல்லாத தேசிய மொழிகள் யாவும் இந்திய அரசால் இதுவரை புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.  நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கித்துறை, தொடர்வண்டித் துறை, வானூர்தித் துறை, வருமானவரித்துறை, நெடுஞ்சாலைத்துறை, கப்பல்துறை, ராணுவம், அஞ்சல் துறை, கல்வித்துறை என அனைத்து துறைகளிலும் இந்தியே ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கெல்லாம் தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகள் முற்றலும் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் இந்தி மாநில மக்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இந்தி அல்லாத மாநிலங்களில் மாநில மொழிகள் தெரியாமலே வேலைக்கு அமர்த்தப் படுகிறார்கள். இந்தி அல்லாத மாநில மக்கள் அவர்கள் சொந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பை இழக்கிறார்கள். எடுத்துக்காட்டாக விமானப் பணிப்பெண்கள் வேலைக்கு இந்தி ஆங்கிலம் தெரிந்தால் போதும். இவர்கள் தமிழ்நாட்டு விமானங்களில் வேலை செய்யலாம். தமிழ் ஆங்கிலம் தெரிந்த தமிழ்நாட்டு பெண்களுக்கு அந்த வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது எவ்வளவு பெரிய அநீதி ? இந்த அநீதியை எப்படி தடுப்பது? 

இதற்கு ஒரே தீர்வு தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்குவோம் என்று கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக, திமுக கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் கூறிவருகிறது. ஆனால் இதுநாள் வரை தமிழ் ஆட்சிமொழியாகவில்லை. மாறாக தமிழகத்தில் அதிக அளவில் இந்தி திணிக்கப்பட்டு தான் வருகிறது. வரும் 2016 தேர்தலிலும் இவ்விரு கட்சிகளும் தமிழை ஆட்சி மொழியாக்குவோம் என்று தேர்தல் அறிவிப்பை வெளியிடும். ஆனால் வெற்று அறிக்கையில் ஒரு பயனும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே பார்த்து வந்துள்ளோம். 

தமிழகத்தில் தற்போது தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் வெளிப்படையாக கேள்வி எழுப்புகிறது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க சட்ட  ரீதியாக அரசியல் ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? அதற்கான செயல்திட்டம் என்ன ? நடுவண் அரசு தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க மறுத்தால் நீங்கள் எத்தகையான எதிர்வினையை ஆற்றப் போகிறீர்கள்? தமிழ் மக்களின் மொழி உரிமையை எல்லா துறைகளிலும் நிலைநாட்ட  நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? தொடர்ந்து தமிழகத்தில் தமிழை புறக்கணித்து இந்தியை திணித்து வரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக எப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கப் போகிறீர்கள் ? தமிழை ஒரு பாடமொழியாகக் கூட  கற்றுக் கொடுக்காத நடுவண் அரசு பள்ளிகளின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? 

இத்தகைய கேள்விகளுக்கு தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் யாவும் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளன. தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழியாக்க உண்மையில் சரியான செயல் திட்டங்களை முன்வைக்கும் கட்சிகளுக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறோம். இனியும் தமிழர்கள் ஏமாற முடியாது.  அதனால் வெறும் அறிக்கை மட்டுமில்லாமல் செயல்திட்டங்களை மக்களின் பார்வைக்கு இக்கட்சிகள் இத்தேர்தலில் கொண்டு வர வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் இந்த அறிக்கையின் வாயிலாக அனைத்து கட்சிகளுக்கும்  கோரிக்கை விடுக்கிறது.

இராச்குமார் பழனிசாமி
தமிழர் பண்பாட்டு நடுவம்





[vuukle-powerbar-top]

Recent Post