Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அதிமுக ஆட்சியில் தமிழுக்கு ஏற்பட்ட பின்னடைவு ! 

கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ் மொழி பல்வேறு இன்னல்களை சந்தித்து பின்னுக்கு தள்ளப்பட்டது. அது எவ்வாறு என்று பார்க்கலாம். 

தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக பயன்படுத்தப்படாமல் ஆங்கிலமே அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டது. 

காவல்துறை வாகனங்களில் கூட தமிழில் 'காவல்' என்று எழுதப்படவில்லை. காவல்துறையில் தமிழர் அல்லாதவர்களே தலைமை பதவிக்கு அமர்த்தப்பட்ட காரணத்தால் தமிழில் அறிவிப்பு செய்வதை காவல்துறை நிறுத்தி விட்டது. சாலை போக்குவரத்து  அறிவிப்புகள் கூட சென்னை காவல்துறை ஆங்கிலத்தில் தான் வெளியிடுகிறது. 

இதே போல பல்வேறு அரசு துறைகளும் ஆங்கிலத்தையே தங்கள் தொடர்பு மொழியாக பயன்படுத்துகின்றனர். 

அரசு ஊழியர்கள் தமிழில் தான் கையெழுத்து போட வேண்டும் என்ற ஆணை இருக்கும் போது அதற்கு எந்த மதிப்பும் கொடுக்காமல் அனைத்து அரசு ஊழியர்களும் ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறார்கள். முதல்வர் அவர்களே ஆங்கிலத்தில் கையெழுத்து போடுவது அவலத்தின் உச்சம். 

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்தும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற ஆணை இருந்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆங்கிலம் மட்டுமே உள்ள பெயர் பலகைகள் எல்லா நகரங்களிலும் முளைத்தன . இதை தட்டிக் கேட்க வேண்டிய அரசு ஆங்கிலத்தை ஊக்குவித்தது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தமிழ் பெயர் பலகைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தன . ஆங்கிலமே முக்கிய இடத்தை பிடித்தது. 

தொடர்வண்டி வானூர்தி நிலையங்களில், நெடுஞ்சாலைகளில்  தமிழை எல்லா இடங்களிலும் கொண்டு வர அதிமுக அரசு தவறி விட்டது. இது இந்தி அரசுக்கு வசதியாக போய்விட்ட காரணத்தால் இந்தி அரசு இங்கெல்லாம் இந்தியை சிக்கலின்றி திணித்தது. எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இன்றும் காணப்படுகிறது. 

தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழியாக்குவேன் என்று உறுதி அளித்த செயலலிதா இறுதி வரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை . அதனால் இந்தி மொழியே தமிழகம் எங்கும் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் இந்தி படித்தால் தான் முன்னேற முடியும் என்ற மாயையை தமிழர்கள் மீது வலுக்கட்டாமாக இந்தி அரசு திணித்து 

தமிழகத்தில் வணிகம் செய்யப்படும் பொருட்கள் அனைத்திலும் தமிழை கொண்டு வர அதிமுக அரசு தவறியது. 

தமிழ்த் தாய்க்கு நூறு கோடியில் சிலை வைப்பேன் என்று உறுதி அளித்த ஜெயலலிதா பிறகு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டார். 

ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒரு முறை நடத்தப்படப் வேண்டிய உலகத் தமிழ் மாநாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் நடத்தப்பட வில்லை. ஆனால் மோடி அரசு உலக இந்தி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 

தமிழ்நாட்டின் அகழ்வாராய்ச்சி உலக அளவில் கொண்டு செல்ல தவறியது அதிமுக அரசு . தமிழுக்கு ஆர்வர்டு பல்கலையில் ஒரு இருக்கை பெற்றுத் தர முன்வரவில்லை. ஆனால் இந்தி அரசோ சமஸ்கிருத மொழியை உலக அளவில் கொண்டு சென்றது. அதற்கு பலநூறு கோடிகளை செலவு செய்கிறது. 

எல்லாவற்றிகும் மேலாக அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விக்கு மூடுவிழா கண்டது அதிமுக அரசின் உச்சபட்ச சாதனை என்றே கூறலாம். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்ற எந்த சலுகையும் வழங்கவில்லை ஜெயாவின் அரசு.  தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நடுவண் அரசு பாடத்திட்டத்திற்கு மாறின . இதன் மூலம் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கூட எடுத்து படிக்க முடியாமல் போனது . ஆனால் இந்தி மட்டுமே மொழிப் பாடமாக இப்பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது. தமிழக மாணவர்கள் தமிழில் எழுதப்படிக்கத் தெரியாமல் போயினர். 

தமிழ் சார்ந்த ஆய்வுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடக்கவே இல்லை என்றும் கூறலாம். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முடியாமல் போனது. உலக அளவில் தமிழின் பெருமை அறியமுடியாமல் போனது. தமிழ் மொழியில் அலைபேசி செயலிகள் அரசு செலவில் எதுவுமே வரவில்லை . வருமானவரி அட்டை, வங்கி அட்டை எவற்றிலும் தமிழ் வரவில்லை . நடுவண் அரசு ஆவணங்கள் எவற்றிலும் தமிழ் இடம்பெற வில்லை . வங்கிகளில் தமிழ் முற்றிலும் அழிக்கப்பட்டது. இதைப்பற்றி எந்த கவலையும் அதிமுக அரசுக்கு இல்லாமல் போனது. 

தொடர்வண்டித் துறையில் தமிழே தெரியாத இந்தியர்கள் தமிழகத்தில் பணியில் அமர்த்தப்பட்டார்கள் . தமிழர்களுக்கு இங்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது . இதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டும் அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. விமான சேவைகளில் தமிழ் தெரியாத பணிப்பெண்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். தமிழ்ப் பெண்கள் புறக்கணிக்கப்பட்டர்கள். 

உயர்நீதிமன்றத்தில் தமிழுக்காக போராடிய வழக்கறிஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். நீதிமன்ற மொழியாக தமிழை கொண்டுவரத் தவறியது அதிமுக அரசு. 

இவ்வாறாக தமிழுக்கும் தமிழர்களுக்கும் அதிமுக ஆட்சியில் பெரும் பின்னிடைவு ஏற்பட்டது. 

இனிவரும் ஆட்சியாவது தமிழுக்கும் தமிழர்களுக்கும் முன்னுரிமை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


[vuukle-powerbar-top]

Recent Post